சென்னை: அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகள் உயர்ந்தன, டாலர் மதிப்பு குறைந்தது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் கடனுக்கான வட்டி விகிதத்தை நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக அந்நாட்டின் மத்திய வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் 0.50 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் ரீடைல் பணவீக்கம் 2% ஆண்டு இலக்கை நோக்கித் தொடர்ந்து குறையும் என்ற கூடுதல் நம்பிக்கையைக் கருத்தில் கொண்டு, பெடர்ல் ரிசர்வ், வட்டி விகிதத்தை அரை சதவீதம் குறைத்தது. பெடரல் ரிசர்வ்-ன் வழக்கமான கால் சதவீதம் சரிவை ஒப்பிடும் போது மிகவும் நம்பிக்கையுடன் எடுக்கப்பட்ட முடிவாக இது உள்ளது.

இதன் மூலம் வங்கிகளுக்கு மத்தியிலான வட்டி மற்றும் நுகர்வோருக்கான வட்டி விகிதங்களை தற்போது 4.75%-5.00% ஆக குறைந்துள்ளது. இது முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, வியாழக்கிழமை மும்பை பங்குச்சந்தையில் பெரும் உயர்வு பதிவாகும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் புதன்கிழமை வர்த்தகத்தில் ப்ளூ சிப் டாவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி குறியீடு 0.36% உயர்ந்து 41,755.91 ஆகவும், S&P 500 குறியீடு 0.47% உயர்ந்து 5,661.29 ஆகவும், நாஸ்டாக் காம்போசிட் 0.77% உயர்ந்து 17,764.34 ஆகவும் நிலவுகின்றன.
2023 ஜூலைக்குப் பிறகு அமெரிக்காவில் பென்ச்மார்க் வட்டி விகிதம் இரண்டு தசாப்தங்களில் உயர்ந்த வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளது. இது முதலீட்டுச் சந்தைக்கு பெரும் சுமையாக இருந்த நிலையில் 2008 பொருளாதார நெருக்கடி, கோவிட் தொற்று காலத்திற்குப் பின்பு பெடரல் ரிசர்வ் முதல் முறையாக 0.50 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.

MSCI உலக பங்குச் சந்தை குறியீடு இந்த வட்டி விகித குறைப்பிற்குப் பின்பு சாதனை உயர்வை எட்டியது, கடைசியாக 0.37% உயர்ந்து 831.78 ஆக நிலவுகிறது. யென் மற்றும் யூரோ உள்ளிட்ட நாணயங்களுடன் ஒப்பிடுகையில் டாலரின் மதிப்பை அளவிடும் டாலர் குறியீடு(DXY) 0.54% குறைந்து 100.36 ஆக நிலவுகிறது.
அமெரிக்க அரசாங்க கடன் பத்திர சந்தையில், 2-ஆண்டு கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் செவ்வாய்க்கிழமை இரவு 3.592% இலிருந்து 3.567% ஆக 2.5 அடிப்படை புள்ளிகள் குறைந்தது. இதற்கிடையில், நிலையான 10-ஆண்டு கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் செவ்வாய்க்கிழமை இரவு 3.642% இலிருந்து 3.657% ஆக 1.5 அடிப்படை புள்ளிகள் உயர்ந்தது.


Click it and Unblock the Notifications