அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுதலை தினம் என்ற பெயரில் ஏப்ரல் 2ம் தேதியன்று, இந்தியா மற்றும் சீனா உள்பட சுமார் 60க்கும் அதிகமான நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். டிரம்பின் இந்த நடவடிக்கையால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.
மேலும், பரஸ்பர வரியால் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும், பொருளாதாரம் மந்தநிலைக்கும் செல்லும் என்ற நிபுணர்கள் எச்சரித்தனர். அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையால் அமெரிக்கா உள்பட சர்வதேச பங்குச் சந்தைகள் பலத்த அடி வாங்கின.

இதற்கிடையே தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. அதேசமயம் டிரம்ப் நிர்வாகமும் கொஞ்சம் கீழே இறங்கி வந்தது.
பரஸ்பர வரி தொடர்பாக தனது வர்த்தக கூட்டாளிகளுடன் (Trading Partner) பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. இந்நிலையில், சீனாவை தவிர இந்தியா உள்பட பிற நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக நேற்று டிரம்ப் அறிவித்தார். இந்த 90 நாட்களுக்கும் 10 சதவீத அடிப்படை இறக்குமதி அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நாடுகள் எதுவும் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக அல்லது பதிலடியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதேபோல் சீனா மீதான 104 சதவீத வரியை 125 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று விறுவிறுவென ஏற்றம் கண்டன. டாவ் ஜோன்ஸ் இன்டஸ்ட்ரீயல் ஆவரேஜ் இன்டெக்ஸ் 2,962 புள்ளிகள் அல்லது 7.9 சதவீதம் உயர்ந்தது. நாஸ்டாக் காம்போசிட் இன்டெக்ஸ் 12.2 சதவீதம் அதிகரித்தது.
S&P 500 இன்டெக்ஸ்க்கு 1940ம் ஆண்டுக்கு பிறகு தனது மூன்றாவது சிறந்த நாளாக அமைந்தது. S&P 500 இன்டெக்ஸில் உள்ள 98 சதவீத நிறுவன பங்குகளின் விலை நேற்று உயர்ந்தது. குறிப்பாக டெல்டா ஏர் பங்கு விலை வர்த்தகத்தின் இடையே 23 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது.
இதுதவிர முக்கிய 10 ஆண்டுகால அமெரிக்க கருவூல பத்திரத்தின் வருவாய் 4.34 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்த இந்த ஒற்றை அறிவிப்பு, அமெரிக்க பங்குச் சந்தைகளின் தலையெழுத்து சில நொடிகளில் மாற்றியது.
அமெரிக்க பங்குச் சந்தைகளின் நேற்றைய எழுச்சி இன்று ஆசிய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது, இந்திய பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை என்பதால் இதன் தாக்கம் நாளை தான் எதிரொலிக்கும்.
அதேசமயம், சீனா பொருட்களுக்கான வரியை டிரம்ப் அதிகரித்து இருப்பதோடு, நடைமுறையில் இருப்பது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை கடுமையாக பாதிக்கும் என்றும், வர்த்தக போர் வெடிக்க வாய்ப்புள்ளதாக என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications