அமெரிக்க பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை வர்த்தகத்திலும் சரிவுடன் துவங்கியுள்ளது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் சுமார் 9 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்து பெரும் போராட்டத்திற்கு பின்பு மீண்ட நிலையில், இன்றும் சரிவும் உடன் துவங்கியது முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று டெக் பங்குகள் தொடர்ந்து பலவீனமாக இருந்த காரணத்தால் அமெரிக்க பங்குச்சந்தையின் 3 முக்கிய குறியீடுகளும் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஃபெடரல் ரிசர்வ் தலைவராக கெவின் வார்ஷை தேர்வு செய்தது, முதலீட்டு சந்தையில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனாலும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பங்குச்சந்தை, தங்கம், வெள்ளி என அனைத்தும் சரிந்துள்ளது.

S&P 500 குறியீடு 0.2 சதவீதம் சரிந்தது. நாஸ்டாக் காம்போசிட் 0.4 சதவீதம் குறைந்தது. டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 0.3 சதவீதம் இறங்கியது. கெவின் வார்ஷ் நியமனம் மூலம் பெடரல் ரிசர்வ்-க்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக நம்பிக்கை நிலவுகிறது.
இதற்கு முக்கியமான காரணம் கெவின் ஏற்கனவே பெட் கவர்னராக இருந்தவர், இதேபோல் நாணய கொள்கைக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும், முதலீட்டு சந்தை மத்தியிலும் சமநிலை வகிப்பதில் உறுதியாக இருப்பவர் என்ற கருத்து உள்ளது. மேலும் முக்கியமாக டிரம்ப்-ன் பேச்சை கேட்டு வரியை குறைக்கும் நபர் கெவின் வார்ஷ் இல்லை என்ற நம்பிக்கை மொத்த முதலீட்டு சந்தையிலும் எதிரொலித்து வருகிறது.
பங்குச்சந்தை போலவே தங்க ஃபியூச்சர்ஸ் 4 சதவீதத்திற்கு மேல் சரிந்தது. வெள்ளி பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் 12 சதவீதம் வீழ்ந்தன. வார்ஷ் நியமனத்தால் சந்தை நம்பிக்கை அதிகரித்ததால் பாதுகாப்பு சொத்துகளான தங்கம், வெள்ளியில் விற்பனை அதிகரித்தது.
அதேநேரத்தில், இன்று வெளியான அமெரிக்காவின் மொத்தவிலை பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததால் அரசு பத்திர லாபம் (Treasury yields) சற்று உயர்ந்தது.
இன்றைய வர்த்தகத்தில் டெக் நிறுவன பங்குகளின் செயல்பாடு தான் முக்கிய பேசு பொருளாக உள்ளது. ஆப்பிள் பங்கு முதல் காலாண்டு லாபம் மற்றும் வருவாய் எதிர்பார்ப்பை விஞ்சியது. ஐபோன் விற்பனை வலுவாக இருந்தது. இருப்பினும் பங்கு 3.4 சதவீதம் சரிந்தது.
இதை தொடர்ந்து டேட்டா ஸ்டோரேஜ் நிறுவனமான சான்டிஸ்க் பங்குகள் 22 சதவீதம் உயர்ந்தது. KLA Corp பங்கு 8 சதவீதம் சரிந்தது. நாஸ்டாக் பங்குச்சந்தையில் சுமார் 1513 பங்குகள் லாபத்துடன் இருந்தாலும், 2462 பங்குகள் சரிவுடன் உள்ளது. 62 பங்குகள் புதிய உச்சத்தையும், 103 நிறுவனங்கள் புதிய குறைந்தபட்ச அளவையும் பதிவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஐடி, நிதியியல், மெட்டிரியல், ரியல் எஸ்டேட் துறை பெரும் சரிவை பதிவு செய்துள்ளது.
இதனால் நாளையும் தங்கம், வெள்ளி விலை சரியும், ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தை சரிவுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications