சீனாவுக்கு சொந்தமான பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலிக்கு அமெரிக்க அரசு தடைவிதித்த நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்றமும் அந்த தடையை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பிரபலமான சமூக ஊடகமாக டிக் டாக் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது தான் இந்த டிக் டாக் செயலி.

ஏற்கனவே இது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அரசும் சட்டம் இயற்றி ஜனவரி 19ஆம் தேதி முதல் அமெரிக்காவில் டிக் டாக் செயலி செயல்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டது.
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு மட்டுமில்லாமல் இந்த தடை சட்ட ரீதியானது தான் என அனுமதி வழங்கியுள்ளது. எனவே 19ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவில் டிக் டாக் செயலி செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்காது என்றும் அரசு கூறியுள்ளது.
டிக்டாக் செயலி அமெரிக்காவில் பிரபலமான சமூக ஊடகமாக இருக்கிறது. இதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் சீன அரசுடன் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கிறது எனக் கூறி அமெரிக்க அரசு இந்த செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. முன்னதாக டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் இந்த தடை நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்கி விட்டால் தொடர்ந்து இந்த செயலியை அமெரிக்கர்கள் பயன்படுத்த முடியும். ஆனால் பைட் டான்ஸ் நிறுவனம் டிக் டாக் செயலியை விற்பனை செய்வது தொடர்பாக தங்களிடம் எந்த திட்டமும் தற்போதைக்கு இல்லை என கூறியுள்ளது.
வீடியோ பகிர்வை அடிப்படையாகக் கொண்ட டிக் டாக் செயலியின் மதிப்பு 100 முதல் 200 பில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த செயலியை விற்பனை செய்வதற்கு பைட் டான்ஸ் நிறுவனமோ அல்லது சீன அரசோ விரும்பாது என்றும் இத்துறை சார்ந்த தொழில் நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிக் டாக் செயலி மூலம் பைட் டான்ஸ் நிறுவனம் பெருமளவிலான விளம்பரங்களை வெளியிட்டு வருமானம் ஈட்டி வருகிறது. அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு டிக் டாக்கை தடை செய்தாலே இந்த நிறுவனத்திற்கு விளம்பரம் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானத்தில் 29 சதவீதம் குறையும் என சொல்லப்படுகிறது. எனவே இந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக பைட் டான்ஸ் நிறுவனம் ஏதேனும் மாற்று நடவடிக்கையில் ஈடுபடலாம் என சொல்லப்படுகிறது.
முன்னதாக அமெரிக்காவை சேர்ந்த ரியல் எஸ்டேட் துறை சார்ந்த தொழிலதிபர் பிரான்ட் மெக்கோர்ட் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார். 20 பில்லியன் டாலர்களை கொடுத்து இந்த செயலியை வாங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால் பைட் டான்ஸ் நிறுவனம் தங்களிடம் அல்காரிதம் ரகசியமாக இருக்க வேண்டும் என விரும்புவதால் இந்த செயலியை விற்பனை செய்ய மறுக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications