வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த அமெரிக்க ராணுவத்தின் அதிரடி நடவடிக்கை உலக சந்தைகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு இந்திய பங்குச் சந்தை மற்றும் நிறுவனங்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.
குறிப்பாக இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோவுக்கு இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று இந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பஜாஜ் ஆட்டோவின் நிலை
பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா தெரிவிக்கையில், வெனிசுலாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்சர் மற்றும் பாக்ஸர் மாடல்கள் அந்நாட்டில் பிரபலமானவை என்றாலும், நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதியில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றார்.
வெனிசுலாவில் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை பெரிதாக பாதிக்காது என்று அவர் உறுதிப்படுத்தினார். 2026ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் பஜாஜ் ஆட்டோவின் மொத்த ஏற்றுமதி 19 சதவீதம் உயர்ந்து 16,39,971 வாகனங்களாக உள்ளது. இது நிறுவனத்தின் பலம் வெளிநாட்டு சந்தைகளில் பரவியுள்ளதை காட்டுகிறது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பஜாஜ் ஆட்டோ பங்குகள் 0.62 சதவீதம் சரிந்து 9499.00 ரூபாயாக உள்ளது. இந்நிறுவனத்தின் 52 வார உயர்வு விலை 9,633.00 ரூபாயாக உள்ளது. இந்த நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் சிறிய அளலிலான தடுமாற்றம் இருந்தாலும் வெனிசுலா தாக்குதல் முதல் நீண்ட கால பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா-வெனிசுலா வர்த்தகம்
க்ளோபல் ட்ரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், அமெரிக்க தடைகள் காரணமாக இந்தியாவின் வெனிசுலா உடனான வர்த்தகம் ஏற்கனவே குறைந்துள்ளது என்றார்.
2025ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 81.3 சதவீதம் குறைந்தது. மேலும் இருநாடுகள் மத்தியிலான வர்த்தகமும் மிகக் குறைவாக உள்ளது. எனவே வெனிசுலாவில் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் இந்தியாவின் பொருளாதாரம் அல்லது எரிசக்தி பாதுகாப்புக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அவர் தெரிவித்தார்.
உலக எண்ணெய் சந்தை அசைவு
வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடு என்றாலும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தடைகளால் இதன் வர்த்தகம் குறைந்துள்ளது. வெனிசுலாவில் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் எண்ணெய் விலையை சிறிய அளவில் உயர்த்தலாம் என்றாலும், உலக சந்தையில் உபரியாக சப்ளை உள்ளதால் பெரிய மாற்றம் ஏற்படாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தியாவுக்கு இது நேரடி பாதிப்பை ஏற்படுத்தாது.


Click it and Unblock the Notifications