அமெரிக்க ராணுவ ஜனவரி 3ஆம் தேதி வெனிசுலா-வில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த நடவடிக்கை உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் முதல் எதிரி நாடுகள் வரை அனைவரும் இதை விமர்சனம் செய்தனர்.
ரஷ்யா, ஈரான் போன்ற மதுரோவுக்கும், வெனிசுலாவுக்கும் நெருக்கமான நாடுகள் இதை கடுமையாக கண்டித்தன. அமெரிக்காவின் நட்பு நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட விமர்சனம் செய்தது.

இந்த நிகழ்வு உலக அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை சர்வதேச சட்டங்களை மீறுவதாக விமர்சிக்கப்படுகிறது. இதேபோல் வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இதேவேளையில் வெனிசுலா ஒரு கச்சா எண்ணெய் வளம் மிக்க நாடு என்பதால், அமெரிக்காவின் தாக்குதல் மூலம் இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பது அனைவரின் முக்கிய கேள்வியாக உள்ளது.
வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்த அமெரிக்க ராணுவ தாக்குதல் உலக எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இருப்பினும், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இதன் மூலம் ஏற்படும் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே வெனிசுலா கச்சா எண்ணெய் மீது தடைகள் இருக்கும் காரணமாக இந்திய நிறுவனங்கள் வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டன. இதேபோல் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளும் கூடுதலாக உற்பத்தி செய்ய திறன் கொண்டு இருப்பதால் வெனிசுலா கச்சா எண்ணெய் இழப்பை எளிதாக பூர்த்தி செய்துவிட முடியும்.
இதேவேளையில் அமெரிக்காவின் தாக்குதல் மூலம் விலையில் சிறிய மாற்றங்கள், தடுமாற்றங்கள் இருந்தாலும், குறுகிய காலம் மட்டுமே இருக்கும், விலை பெரிதாக உயர வாய்ப்பில்லை.
வெனிசுலா தற்போது ஒரு நாளுக்கு ஏறத்தாழ 9 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. இது உலகளவிலான மொத்த கச்சா எண்ணெய் சப்ளையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே. இதில் 7.65 லட்சம் பேரல்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த ஏற்றுமதியில் 76 சதவீதம் சீனாவுக்கு செல்கிறது, குறிப்பாக சிறு சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு செல்கிறது. மீதமுள்ளவை கியூபா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கு செல்கின்றன. வெனிசுலா ஏற்றுமதி ஏற்கனவே குறைந்துள்ளதால், இந்த நடவடிக்கை உலக விலையை பெரிதாக பாதிக்காது.
இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெனிசுலா எண்ணெயை தடைகள் காரணமாக வாங்குவதை நிறுத்திவிட்டன. எனவே இந்த அமெரிக்க தாக்குதல் இந்தியாவை பாதிக்காது என்று தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பல மாதங்களாக ஒரு பேரலுக்கு 60 முதல் 65 டாலர் வரம்பில் உள்ளது. இது உலக சந்தையில் பல்வேறு போர் பதற்றங்களுக்கு மத்தியில் தொடர்ந்து உபரியான கச்சா எண்ணெய் வர்த்தக சந்தைக்கு வருவதை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications