ஆந்திர பிரதேசம்: அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் காதலுக்காக சொந்த நாட்டை விட்டு இந்தியாவிற்கு வந்திருப்பது காண்போரை அதிசயிக்க வைத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்கள் உலகையே நம் கைக்குள் கொண்டு வந்துவிட்டன. உலகின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்தவர்களை இணைக்கும் ஒரு ஊடகமாக இவை மாறி விட்டன. இப்படி நட்பாக பழக தொடங்கும் சிலர் பின்னாளில் காதலர்களாகி திருமண வாழ்விலும் இணைகின்றனர். இது ஒரே மாநிலம் அல்லது நாட்டிற்குள் நடக்கும் போது பெரிய விஷயமாக தெரிவதில்லை. சில காதல்கள் கடல் கடந்தும் உருவாகின்றன. அப்படி அதிசயப்படுத்தும் ஒரு காதல் கதை தான் இது.

அமெரிக்காவை சேர்ந்த ஜாக்குலின் ஃபெராரோ ஒரு கிறிஸ்துவ பெண். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். புகைப்பட கலைஞராக இவர் வேலை பார்த்து வருகிறார். வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்து இருந்த ஜாக்குலினுக்கு நம்பிக்கையாக கிடைத்திருக்கிறது இன்ஸ்டாவில் கிடைத்த நட்பு.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சந்தனிடம் இன்ஸ்டா மூலம் அறிமுகமானார் ஜாக்குலின். பின்னர் இருவரும் பேசி நண்பர்களாகியுள்ளனர். இந்த நட்பு பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. இந்நிலையில் தான் தன் காதலனை காண அமெரிக்காவில் இருந்து ஆந்திராவிற்கு வருகை தந்துள்ளார் ஜாக்குலின் . இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த தம்பதிக்கு சொந்தமாக ஒரு யூடியூப் சேனலும் இருக்கிறது. அதில் இருவரிடையே எப்படி நட்பு ஏற்பட்டது, அது எப்படி காதலாக மலர்ந்தது என்பன உள்ளிட்டவற்றை அவர்கள் பகிர்ந்துள்ளனர். வயது, கலாச்சாரம் , நிதி நிலைமை என அனைத்தையும் கடந்து இவர்கள் மத்தியில் தோன்றிய காதல் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஜாக்குலின் 14 மாதங்கள் காதல் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நாங்கள் தயாராகி விட்டோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் சந்தனை விட 9 ஆண்டுகள் வயதில் மூத்தவள் என்பதையும் ஜாக்குலின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
வீடியோ காலில் மட்டுமே பார்த்து கொண்டிருந்தவர்கள் முதன்முறையாக நேரில் சந்தித்த அந்த தருணத்தையும் அவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். ஜாக்குலினின் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
ஒரு பயனர் நாங்களும் இப்படிதான் இன்ஸ்டாவில் சந்தித்தோம். எங்களிடையே காதல் மலர்ந்தது, 7 மாதங்களுக்கு பிறகு நான் இந்தியா வந்து அவரை திருமணம் செய்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்கள் மூலம் இது போல காதல் உண்டாகி திருமணத்தில் இணைவது தற்போது அதிகரிக்கு விட்டாலும் சில மோசடியாளர்களும் இருக்கின்றனர் என்பதால் இந்த தளங்களை பயன்படுத்துவோர் கவனமாக இருப்பதும் அவசியம்.


Click it and Unblock the Notifications