இந்த வார இறுதியில் யெமன் மற்றும் அமெரிக்கா இடையே புதிய பிரச்சனை வெடித்துள்ளது. ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன், சீனா - தைவான், இஸ்ரேல் - ஹமாஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது யெமன் மற்றும் அமெரிக்கா இடையே ராணுவ தாக்குதல் நடந்துள்ளது .
சர்வதேச அளவில் புவிசார் அரசியல் அபாயங்கள் முதலீட்டு சந்தையை மோசமாகப் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் ஞாயிற்றுக்கிழமை யெமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங் கடலில் (Red Sea) மூன்று வர்த்தகக் கப்பல்களைத் தாக்கியதாகவும், பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கப் போர்க்கப்பல் பல மணிநேர தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மூன்று ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியது. இது உலகளவில் பெரும் பிரச்சனையாகப் பார்க்கப்படுவது மட்டும் அல்லாமல் அமெரிக்கா இதைச் சர்வதேச வர்த்தகத்திற்குப் பாதிப்பாகப் பார்த்து வருகிறது.
இதுகுறித்து அமெரிக்க இராணுவத்தின் சென்டரல் கமெண்ட் வெளியிட்ட அறிக்கையில், யெமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங் கடலில் நடந்த இந்தத் தாக்குதல்கள் சர்வதேச வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருப்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது.
மேலும், யெமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தான் இந்தத் தாக்குதல்கள் முழுமையாகச் செயல்படுத்தியுள்ளனர் என்று கூறுவதற்கு எங்களுக்கு எல்லாக் காரணங்களும் உள்ளன என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரான் நாட்டின் உதவியில் செயல்படுவதாக அமெரிக்கா நம்புகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்குமான இடையே ஏற்கனவே பல வாரங்கள் கடுமையாகத் தாக்குதல்கள் நடந்து வரும் வேளையில், வெள்ளிக்கிழமையன்று ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் மீண்டும் தோல்வியடைந்ததுள்ளது.
இதனால் இஸ்ரேல் நாட்டின் இராணுவம் காசா-வில் மீண்டும் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் தாக்குதலை மீண்டும் துவங்கியுள்ளது. இதனால் காசா பகுதியில் மீண்டும் மக்கள் பீதியுடன் உள்ளதால் ஒட்டுமொத்த அரபு நாடுகளும் வர்த்தகம், முதலீட்டு, ஏற்றுமதி பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
இதனால் தங்கம் விலையில் துவங்கி பங்குச்சந்தை, நாணய சந்தை, கச்சா எண்ணெய் விலை, பிட்காயின் விலை வரையில் தடுமாற்றம் ஏற்றப்பட்டு உள்ளது. இதேவேளையில் உலகளவில் அதிகரிக்கும் புவிசார் அரசியல் பதட்டங்களால் தங்கம் இப்போது முக்கியமான முதலீடாக மாறியுள்ளது.
இதோடு அமெரிக்கா ராணுவத்தின் சென்டரல் கமெண்ட் கூறுவது போல் யெமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங் கடலில் நடந்த இந்தத் தாக்குதல்கள் சர்வதேச வர்த்தகத்திற்கு அச்சுறுத்தல் இருந்தால் பல பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கும். இதனால் பணவீக்கம் உலக நாடுகளில் அதிகரிக்கத் துவங்கும்.


Click it and Unblock the Notifications