குஜராத்: உலகளவில் தற்போது எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில் பயன்படுத்தப்படும் சிப்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. தைவான் நாடு தான் உலகிற்கு தேவையான சிப்களில் பெரும்பாலானவற்றை உற்பத்தி செய்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவும் தற்போது சிப் அல்லது செமி கண்டக்டர்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. தைவான் நிறுவனங்களின் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் சிப் தயாரிக்கும் ஆலைகளை நிறுவி வருகின்றன. இந்நிலையில் சிப் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட மைக்ரான் (Micron)என்ற நிறுவனம் மெமரி சிப்புகளை உற்பத்தி செய்து உலகெங்கிலும் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் மிகப்பெரிய அளவு முதலீட்டினை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது .
ஏற்கனவே இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் ஹைதராபாத்தில் உள்ளது. இந்த நிறுவனம் தற்போது குஜராத் மாநிலம் சனாதில் ஆலையை நிறுவ இருக்கிறது.
உலகம் முழுவதும் தங்கள் அலுவலகங்கள் செயல்பட்டு வருவதாக கூறியுள்ள மைக்ரா நிறுவனத்தின் மூத்த துணை தலைவரான நாகா சந்திரசேகரன், ஜப்பான், தைவான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
ஐரோப்பாவிலும் தங்களுக்கு அலுவலகங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.இந்த துறையில் தங்களது போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலான நாடுகளில் அலுவலகத்தை நிறுவி செயல்பட்டு வரக்கூடிய ஒரு நிறுவனமாக மைக்ரான் இருக்கிறது என்றும் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்ய இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது ஹைதராபாத்தில் செயல்பட்டு வரக்கூடிய மைக்ரான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் 3500 பேர் பணி புரிகின்றனர். ஆனால் இது வெறும் தொடக்கம்தான் என்றும் குஜராத்தில் தங்களது உற்பத்தி ஆலை விரைவில் பிரம்மாண்டமான அளவில் நிறுவப்பட இருப்பதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது. முதல்கட்டமாக சிப்புகளை பொருத்துவது, சோதனை செய்வது, பேக் செய்வது ஆகிய பணிகள் இந்த ஆலையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சியில் இந்தியாவை ஒரு முக்கிய பங்காக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள சந்திரசேகரன் , இந்த துறையில் நல்ல வளர்ச்சி பெற கூடிய நாடாக இந்தியாவை காண்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மைக்ரான் நிறுவனத்தில் சுமார் 44,000 பேர் பணி புரிகின்றனர், இவர்களில் 4,000 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications