அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட SaaS நிறுவனமான சாஸ்ஜீனி, ஜூன் 22ஆம் தேதி திருச்சி, தில்லைநகரில் உள்ள Cowork அலுவலகத்தில் தங்களது புதிய சாப்ட்வேர் டெவலப்மென்ட் சென்டரை திறந்துள்ளது.
இந்த தகவலை சாஸ்ஜீனியின் இணை நிறுவனரான டொமினிக் பிரான்சிஸ் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "திருச்சியில் எங்கள் புதிய டெலிவரி டென்டரை தொடங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்! இந்த புதிய வசதி, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் முயற்சியின் சான்று" என்று தனது பதிவில் குறிப்பிட்டார்.

சாஸ்ஜீனியின் மற்றொரு அதிகாரியான ராபர்ட் ரோமா பிரவீன் தனது லிங்க்ட்இன் பக்கத்தில், "திருச்சியில் எங்கள் புதிய அலுவலகத்தின் திறப்பு விழாவைக் கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்! இது எங்கள் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல் இது.
புதிய மையம் திறப்பு விழாவோடு நிற்காமல், நாங்கள் சம்பாதித்த சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்கும் முயற்சியாக, புதிய பட்டதாரிகளுக்கான விரிவான பயிற்சித் திட்டத்தை சாஸ்ஜீனி தொடங்கவுள்ளது.
இதன் மூலம், SaaS துறையில் சிறந்து விளங்கத் தேவையான திறன்களையும் வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது. இது வெறும் வலுவான பணியாளர்களை உருவாக்குவது மட்டுமல்ல, இளைஞர்களுக்கு இத்துறையில் புதிய எதிர்காலத்தை உருவாக்குவதோடு, சமூகத்தின் எதிர்காலத்தில் முதலீடு செய்வது வரையில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது திருச்சி ஐ.டி துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. தற்போது கோவையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய ஐ.டி மையமாக திருச்சி மாறும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
ஏற்கனவே திருச்சியில் டைடல் பார்க் திறக்கப்பட்டது மூலம் சிறிதும் பெரிதுமாகப் பல ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் வரத் துவங்கியுள்ளது. இதேபோல் SaaS என்றால் என்ன? இது ஐ.டி சேவை நிறுவனங்களில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? முதல் SaaS - Software as a Service என்பது ஒரு மென்பொருள் சேவை வழங்கு முறை என புரிந்துகொள்ள வேண்டும்.
ஐ.டி சேவை நிறுவனங்கள் பாரம்பரிய முறையில் நிறுவனங்களின் தனிப்பட்ட தேவைக்கேற்ப மென்பொருட்களை உருவாக்கித் தருகின்றன. இதற்கு அதிக செலவு மற்றும் நேரம் தேவைப்படும்.
சாஸ் (SaaS) நிறுவனங்கள் ஒரே மாதிரியான சேவையை அனைத்து துறைக்கும் பயன்படுத்தும் வகையில் ஒரு மென்பொருளை உருவாக்கி அதை நிறுவனத்திற்கு ஏற்ப பர்சனலைஸ்டு செய்து அளிக்கும். இதன் மூலம் குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் மென்பொருளைப் பயன்படுத்த முடியும். மென்பொருள் மேம்பாடு மற்றும் பராமரிப்பு போன்ற பொறுப்புகள் சாஸ் நிறுவனத்திடம் இருக்கும்.
சாஸ்ஜெனி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் திருச்சியில் கிளை தொடங்குவது, இங்கு ஐ.டி துறை வளர்ச்சிக்கு அறிகுறியாக உள்ளது. திறமையான சாப்ட்வேர் ஊழியர்கள் கொண்ட ஆதாரம், குறைந்த செலவு மற்றும் அரசு ஆதரவு ஆகிய காரணங்களால், தொடர்ந்து வரும் முதலீடுகள் மூலம், கோவையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய ஐ.டி மையமாகத் திருச்சி உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications