வாஷிங்டன்: கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அமெரிக்க நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை தொடர்கின்றன. அமெரிக்க அரசின் தொழிலாளர் துறை அண்மையில் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2024ஆம் ஆண்டு டிசம்பரை ஒப்பிடும்போது அமெரிக்காவில் வேலைவாய்ப்பு 1.3 மில்லியன் வரை குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதையே இது காட்டுவதாக அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. இதனிடையே அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் இயங்கும் நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் உள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 6000 பேர் பல்வேறு நிறுவனங்களால் வேலையை விட்டு நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓன்செமி இன்டெலிஜண்ட் டெக்னாலஜி (Onsemi Intelligent Technology) நிறுவனம் 2400 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளது. தங்களுடைய மொத்த ஊழியர்களில் 9 சதவீதம் பேரை இந்த நிறுவனம் வீட்டுக்கு அனுப்பியுள்ளது. சான் பிரான்சிஸ்கோவை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய ஆட்டோ டெஸ்க் ( Autodesk) நிறுவனம் 1150 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது. ஹெச்பி நிறுவனம் சுமார் 2000 பேரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல அமெரிக்காவில் சுகாதாரத் துறை சார்ந்த இயங்கி வந்த HerMD என்ற பெண்களுக்கான நிறுவனம் மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த அனைவருமே வேலையை இழந்துள்ளனர். வாடிக்கையாளர் மற்றும் சில்லறை விற்பனை பிரிவில் இயங்கும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 1100 பேரையும், அமேசான் நிறுவனம் 1700 பேரையும் வேலையிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளன.
வால்மார்ட் மற்றும் வே ஃபே ஆகிய நிறுவனங்களும் 100க்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. விமான துறையில் இயங்கக்கூடிய ப்ளூ ஆரிஜின் நிறுவனம் 1400 பேரை பணியில் இருந்து நீக்கி உள்ளது. அதேபோல மெட்டா நிறுவனம் 5 சதவீதம் ஊழியர்களையும் மைக்ரோ சிப் டெக்னாலஜிஸ் நிறுவனம் 2000 ஊழியர்களையும் வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை காணப்படுவதாலும், டிரம்ப் நிர்வாகம் விசா தொடர்பாக வெளியிடும் சில அறிவிப்புகளும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. சில நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதோடு ஒருங்கிணைத்து விட்டதால் அந்த வேலையில் இருந்த மனிதர்களை பணி நீக்கம் செய்வதாகவும் தெரிகிறது. மெடா உள்ளிட்ட நிறுவனங்கள் சரியாக செயல்படாத ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளன. 2025ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே சுமார் 18,000 ஊழியர்கள் அமெரிக்க நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications