உலகம் முழுவதும் கொரோனா தொற்று பதிப்புக்கு பின்பு ரிமோட் வொர்கிங் கலாச்சாரம் மிகப்பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்த இதே நேரத்தில், ஊழியர்களைக் கண்காணிக்கும் பொறுப்பும் அதிகரித்துள்ளது.
அப்படி ஒரு நிறுவன ஊழியர்களைக் கண்காணிப்பதாகவும், ஊழியரின் செயல் திறனைக் கண்காணிப்பதாகவும் கூறி அளவுக்கு மீறிச் செயல்பட்டு உள்ளது. இதில் கடுப்பான ஊழியர் நிறுவனம் சொல்வதை எல்லாம் செய்யமுடியாது எனக் கூறவே, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஊழியர் வழக்கு தொடர்ந்த நிலையில் நிறுவனம் பெரும் பாதிப்பை எதிர் கொண்டு உள்ளது.
புளோரிடா நிறுவனம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனமான Chetu, அமெரிக்காவை விட்டு வெளிநாடுகளில் இருக்கும் ஊழியர்களைக் கண்காணிக்கவும், திறன் மேம்பாட்டு அளவை கணக்கிடவும் ஒரு நாளுக்கு 8 மணிநேரமும் ஊழியரை நேரடி கண்காணிப்பில் வைக்க முடிவு செய்தது.
வெப்கேம், கம்ப்யூட்டர் ஸ்கிரீன்
இதற்காக ஒரு நாளில் 8 மணிநேர பணி நேரத்தில் ஊழியர் தங்களது வெப்கேம்-ஐ ஆன் செய்திருக்க வேண்டும், இதேபோல் அவர்கள் பணியாற்றும் கம்ப்யூட்டரின் ஸ்கிரீன்-ஐயும் பகிர வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் கடுப்பான Chetu நிறுவனத்தின் நெதர்லாந்து ஊழியர் இந்த வெப்கேம் மற்றும் ஸ்கிரீன் ஷேரிங் விதிமுறையைப் பின்பற்ற முடியாது எனத் தெரிவித்தார்.
வழக்கு
இதைத் தொடர்ந்து Chetu நிறுவனம், அந்த நெதர்லாந்து ஊழியரை பணிநீக்கம் செய்தது. இதில் மேலும் கோபம் அடைந்த நெதர்லாந்து நிறுவனம் மனித உரிமையை மீறுவதாக வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணையில் நீதிமன்றம் பணியிடத்தில் ஊழியரை Video surveillance செய்வது ஊழியரின் தனிநபர் வாழ்க்கையில் நுழைவதாகும் என அறிவித்தது.
72,700 டாலர் நஷ்டஈடு
இதுமட்டும் அல்லாமல் பாதிக்கப்பட்ட நெதர்லாந்து ஊழியருக்கு Chetu நிறுவனம் சுமார் 72,700 அமெரிக்க டாலரை நஷ்டஈடாக அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் பல நிறுவனங்கள் ஊழியர்களிடம் அத்துமீறி நடந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல்.காம் சர்வே
டிஜிட்டல்.காம் நிறுவனத்தின் ஆய்வுகள் படி சுமார் 60 சதவீத நிறுவனங்கள் ரிமோட் ஊழியர்களைக் கண்காணிக்கப் பல்வேறு monitoring software பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது, இதே ஆய்வில் ஒரு நாளுக்கு 2 -3 மணிநேரம் ஊழியர் பணியாற்றுவது இல்லை எனவும் நிறுவனங்கள் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications