அமெரிக்காவில் பொது தேர்தல் நெருங்கும் வேளையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு மீண்டும் சீனாவை வம்புக்கு இழுத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரம்ப் தலைமையிலான முந்தைய ஆட்சியின் போது சீனாவுக்கு ஏற்றுமதி, இறக்குமதி தாண்டி தொழில்நுட்ப பகிர்வு, நிதி திரட்டல் வரையில் பல்வேறு நெருக்கடியைக் கொடுத்தது.
டிரம்ப் ஆட்சியை தொடர்ந்து ஜோ பைடன் ஆட்சி காலத்தில் சீனாவை கட்டம் கட்டி அடிக்கும் பணிகள் குறைந்தது. ஆனால் தற்போது அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஜோ பைடன் அரசு மீண்டும் சீனாவை டார்கெட் செய்ய துவங்கியுள்ளது.

சீனாவின் சிப் தயாரிப்பு தொழில் மீது தேசிய பாதுகாப்புக்கு அச்சம் இருக்கும் காரணமாக, இத்துறையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க செயற்கை நுண்ணறிவு (AI) சிப்புகள் மற்றும் சிப் தயாரிக்கும் கருவிகளைச் சீனா பெறுவதைத் தடைசெய்யும் நோக்குடன், AI சிப் தயாரிப்பு தொழில்நுட்பம் பெறுவதைக் கடினமாக்கும் நோக்குடன் ஜோ பைடன் நிர்வாகம் வெள்ளிக்கிழமை இத்துறை சார்ந்த விதிகளைத் திருத்தியது.
அக்டோபரில் வெளியிடப்பட்ட விதிகள், என்விடியா மற்றும் பிற அமெரிக்க நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட AI சிப்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தும் முயற்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு காரணமாக சீனா இந்த ஏஐ தொழில்நுட்பத்தையும், ஏஐ சிப்களையும் அதன் இராணுவத்தின் பலத்தை உயர்த்த உதவும் என்ற அச்சத்தை அமெரிக்கா தெரிவித்து இந்த விதிகள் கொண்டுவரப்பட்டது.
அக்டோபரில் வெளியிடப்பட்ட 166 பக்கங்கள் கொண்ட புதிய விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்த விதிகள் எந்த அளவுக்குக் கடுமையாக இருக்கிறது என்றால், என்விடியா மற்றும் பிற அமெரிக்க நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சிப்கள் கொண்ட லேப்டாப்களும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத அளவுக்கு கடுமையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மேற்பார்வையிடும் வர்த்தகத் துறை, சீனாவிற்குத் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து புதுப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
ஏற்கனவே சீனாவின் சிப் தயாரிப்பு தொழில்நுட்பத்தைப் பெறக் கூடாது என அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் சீனாவுக்கு சிப் தயாரிப்பு சார்ந்த எந்த தொழில்நுட்பமும், கருவிகளும் அளிக்கக் கூடாது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளது. இதனால் சீனா இத்துறையில் பெரிய அளவில் பின்தங்கினாலும், சமீபத்தில் சொந்த முயற்சியில் அதிநவீன சிப் தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications