இந்திய மக்கள் கடந்த சில மாதங்களாக அதிகம் புலம்பும் விஷயமாக மாறிவிட்டது அமெரிக்காவுக்கான விசா காத்திருப்பு காலம். ஏற்கனவே ஹெச்1பி விசா கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும் வேளையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்பு பிஸ்னஸ் விசா மற்றும் சுற்றுலா விசா பெற 500 முதல் 600 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
இந்த பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு அமெரிக்க அரசு பல முயற்சிகளை செய்து வரும் வேளையில் அதிரடியாக இந்த வாரம் 2,50,000 விசா இண்டர்வியூ அப்பாயின்மென்ட்-ஐ திறந்துள்ளது. இதன் மூலம் அடுத்த சில வாரங்களில் சுமார் 2.5 லட்சம் பேர் அமெரிக்கா செல்வதற்கான விசா பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கியுள்ளது.

சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் B1/B2 விசா இண்டர்வியூ பெற அக்டோபர் மாத இறுதியில் அதன் காத்திருப்பு காலம் 531 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் விசா ஸ்லாட்கள் மூலம் சென்னை அமெரிக்க தூதரக விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்காது என்பது தான் வருத்தமான செய்தி.
அமெரிக்க தூதரக அமைப்பு தற்போது திறந்துள்ள 2.5 லட்சம் விசா அப்பாயின்மென்ட் ஸ்லாட்கள் டெல்லி மற்றும் கொல்கத்தா தூதரகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கடந்த மாதம் டெல்லியில் 543 நாளாக இருந்த காத்திருப்பு காலம் தற்போது 37 நாட்களாக குறைந்துள்ளது. இத்போல் கொல்கத்தாவில் 126 நாளாக குறைந்துள்ளது.
மும்பை, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் இன்னும் 500 நாட்களுக்கு அதிகமாக தான் உள்ளது. அமெரிக்காவின் வர்த்தக அமைப்பின் சர்வதேச வர்த்தக நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் படி 2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமாக பயணித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் மட்டும் எப்போதும் இல்லாத வகையில் இந்தியர்கள் அமெரிக்கா செல்ல 10 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களை விண்ணப்பித்து புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. மேலும் அமெரிக்க தூதரக அமைப்பு கையாளும் ஒட்டுமொத்த விசா விண்ணப்பத்தில் இந்தியாவின் விண்ணப்பம் மட்டுமே 10 சதவீதம். ஸ்டூடென்ட் விசா பிரிவில் 20 சதவீதம், வேலைவாய்ப்பு பிரிவில் 65 சதவீதம்.
B1 விசா என்பது அமெரிக்காவில் வணிகம் தொடர்பான விஷயங்களுக்கு தனிநபர்களுக்கு வழங்கப்படும் விசா, B2 விசா என்பது சுற்றுலா பணிகளுக்காக வழங்கப்படும் விசா. இந்த விசா தான் இந்தியர்கள் அமெரிக்காவில் இருக்கும் தங்கள் குடும்பத்தினரை சந்திப்பது, முதல் மருத்துவ சேவைகளுக்காக செல்வோர் பயன்படுத்துவது.


Click it and Unblock the Notifications