வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்தே அரசு செலவினங்களை சிக்கனப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காகவே டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அரசு செயல் திறன் துறை என்ற ஒரு துறையை உருவாக்கியது.
எலான் மஸ்க் தலைமையில் செயல்பட்டு வரக்கூடிய அரசு செயல் திறன் துறை அரசு செலவினங்களை சிக்கனப்படுத்துவது , அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பது ,முடிந்த அளவு தொழில்நுட்பங்கள் மூலம் அரசு பணிகளை மேற்கொள்வது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை தற்போது 2.3 மில்லியன் அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். அரசு ஊழியர்களுக்காக அமெரிக்க அரசு பல லட்சம் டாலர்களை செலவிடுகிறது. இதனை குறைக்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அரசு ஊழியர்களில் சுமார் 75 ,000 பேருக்கு தாங்களாகவே வேலையை விட்டு செல்வதற்கான வாய்ப்பை டிரம்ப் நிர்வாகம் வழங்கி உள்ளது . பைஅவுட் என்ற இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் முன்கூட்டியே பணி ஓய்வு பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு தாங்களாகவே முன்வந்து பணியில் இருந்து விலகக்கூடிய அரசு ஊழியர்களுக்கு அடுத்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரையிலான சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் ஆதரவும் இருக்கிறது எதிர்ப்பும் இருக்கிறது. இது அமெரிக்க அரசில் பணிபுரிந்து வரும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஊழியர்களுக்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெறும் வயதை நெருங்கக் கூடிய ஊழியர்களை பொறுத்தவரை இந்த வாய்ப்பினை சிறந்ததாக கருதுகின்றனர். ஏனெனில் பொதுவாக ஊழியர்கள் முன்கூட்டியே பணி ஓய்வு பெறும் போது அவர்களுக்கு கிடைக்கும் பலன்களில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
ஆனால் அரசின் இந்த திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெறுபவர்கள் எந்த பிடித்தமும் இல்லாமல் முழுமையான ஓய்வு பலன்களை பெறுவார்கள். எனவே ஓய்வு பெறும் வயதை நெருங்கியவர்கள் இதனை நல்வாய்ப்பாக பார்க்கின்றனர். ஆனால் 40 வயதுகளில் இருப்பவர்கள் திடீரென அமெரிக்கா அரசு இவ்வாறு கூறுவதை ஏற்க முடியாது என தெரிவிக்கின்றனர்.
இந்த அரசுக்காகவும் இந்த அமைப்புக்காகவும் நாங்கள் பல ஆண்டுகால உழைத்திருக்கிறோம், ஆனால் திடீரென எங்களை வேலையில் இருந்து செல்லுமாறு கூறுவது எப்படி நியாயமாகும் என கேள்வி எழுப்புகின்றனர். தற்போது இந்த வயதில் வேலையை விட்டுவிட்டு தனியார் நிறுவனத்தில் சென்று நாங்கள் வேலை தேட வேண்டி இருக்கிறது இது எப்படி சாத்தியமாகும் எங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது என கூறுகின்றனர்.
அமெரிக்க அரசாங்கம் எங்களை ஏமாற்றி விட்டது என சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ஏற்கனவே வேலைவாய்ப்பு சந்தை பல்வேறு சவால்களை கொண்டதாக மாறி இருக்கிறது. வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியராக இருந்து பணியிலிருந்து ராஜினாமா செய்து மீண்டும் வேலை தேடி செல்வது எப்படி இருக்கும் என தங்களுடைய 40 வயதில் இருக்கும் பலரும் வருத்தப்படுகின்றனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
Story Written: devika


Click it and Unblock the Notifications