ஜோ பைடன் தலைமையிலான அரசு வியாழக்கிழமை அமெரிக்காவில் ரஷ்யாவின் காஸ்பர்ஸ்கி லேப் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆன்டி வைரஸ் மென்பொருளின் விற்பனையைத் தடை செய்யும் திட்டங்களை அறிவித்தது.
ஏற்கனவே அமெரிக்கா - ரஷ்யா மத்தியிலான பெரிய பிரச்சனை நடந்து வரும் வேளையில் அமெரிக்காவில் செயல்படும் ரஷ்ய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அரசின் வர்த்தக செயலாளர் ஜினா ரைமொண்டோ கூறுகையில், காஸ்பர்ஸ்கி லேப் நிறுவனம் மீதான ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், இதன் மூலம் அமெரிக்கத் தனிநபர் தகவல்களுக்கு ஆபத்து ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
காஸ்பர்ஸ்கி லேப் தயாரிக்கும் ஆன்டி வைரஸ் மென்பொருளுக்கு, ஒரு கணினியின் அமைப்புகளில் அனைத்து விதமான அனுமதிகளும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க கணினிகளில் இருந்து முக்கியமான தகவல்களைத் திருடவோ அல்லது தீமை ஏற்படுத்தும் மால்வேர் நிறுவவோ முடியும். இதன் மூலம் அமெரிக்க மக்களின் தனிநபர் தகவல்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.
இதுமட்டும் அல்லாமல் காஸ்பர்ஸ்கி லேப் தயாரிக்கும் ஆன்டி வைரஸ் மென்பொருளைத் தனிநபர் மட்டும் அல்லாமல் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் மற்றும் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களும் அடங்கும் என்பதால் கூடுதல் ஆபத்து உள்ளது என அமெரிக்க அரசின் வர்த்தக செயலாளர் ஜினா ரைமொண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் ஜினா ரைமொண்டோ கூறுகையில், அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து ஆயுதமாக மாற்றுவதற்கு ரஷ்ய அரசு காஸ்பர்ஸ்கி போன்ற ரஷ்ய நிறுவனங்களைத் தூண்டும் நோக்கத்தை ரஷ்யா கொண்டு உள்ளது. அதனால் தான் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" என்று ரைமண்டோ கூறினார்.
காஸ்பர்ஸ்கியின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உயர்ந்த இலக்கை கொண்டு இயங்கி வருகிறது, அமெரிக்க அரசின் தற்போதைய நடவடிக்கை என்பது புவிசார் அரசியல் மற்றும் அரசியல் கவலைகள் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என நாங்கள் நம்புகிறோம் என காஸ்பர்ஸ்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் காஸ்பர்ஸ்கி நிறுவனத்தை அமெரிக்க அரசின் சிறப்பு தடை நிறுவன பட்டியலில் சேர்க்கும் திட்டமும் உள்ளது. இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டால் அமெரிக்க சப்ளையர்கள் இந்நிறுவனத்திற்கு எவ்விதமான தயாரிப்புகளையும், பொருட்களையும் விற்பனை செய்ய முடியாது.


Click it and Unblock the Notifications