ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் பல்வேறு நாடுகளும், ரஷ்யாவுக்கு எதிராக தடை விதித்து வருகின்றன. குறிப்பாக இப்பிரச்சனை ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்து வருகின்றது.
குறிப்பாக ரஷ்யாவின் பொருளாதாரத்தினை முடக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
ஏற்கனவே ஸ்விப்ட் தடை முதல் கொண்டு எரிபொருள் தடை வரையில் பல்வேறு தடைகளை விதித்துள்ளது.
பல தடைகள்
ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடங்கி, தனி நபர்கள், ரஷ்யாவின் பல முன்னணி நிறுவனங்கள் பொருட்கள், ரஷ்யாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை, ரஷ்ய எரிபொருளுக்கு தடை என எந்த வகையில் எல்லாம் ரஷ்யாவினை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்த முடியுமோ? அந்த வகையில் எல்லாம் முடக்கியது.
அமெரிக்காவின் புதிய தடைகள்
தற்போது உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தங்களில், அதிபர் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ள நிலையில், அமெரிக்க புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டு வருகின்றது. ஐரோப்பிய நாடுகளும் தடைகள் குறித்து திட்டமிட்டு வருகின்றன. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனியெட்ஸ்க் மற்றும் ஸ்ப்போரீஷியா, கெர்சோன் உள்ளிட்ட பகுதிகளை இணைத்துக் கொண்டதாக ரஷ்யா தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு பலன்
தற்போது அமெரிக்காவின் தடை பட்டியலில் அலுமினியமும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அலுமினியம் விலையும் உச்சம் தொடலாம். இது இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்திய நிறுவனங்களான ஹிண்டால்கோ, வேதாந்தா, நால்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே ஏற்றம் காண ஆரம்பித்து விட்டன.
ஆதரவாக அமையலாம்
அலுமினியம் தடை என்ற தகவல்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையிலும் அலுமினியம் விலையானது பெரும் உச்சத்தினை எட்டியுள்ளது. இந்த நிலையில் தான் இந்திய அலுமினிய உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளார்கள் இதனால் பலன் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கண்ட சில இந்திய நிறுவனங்கள் கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன. இது இனியும் நிறுவனங்களுக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
அதோடு இந்தியாவில் அலுமினியத்திற்கான தேவை அதிகம். ஆக விலை அதிகரித்தால் வேதாந்தா, ஹிண்டால்கோ, நால்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடையலாம். இது தற்போதைய நிலையில் இருந்து மேற்கோண்டு 15% வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications