அமெரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனமான செவ்ரான், ஒரு பெரிய பணிநீக்க திட்டத்தை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் தான் பணிநீக்கம் செய்கிறது என்றால் தற்போது பிற துறை ஊழியர்களிலும் பணிநீக்கம் துவங்கியுள்ளது.
செவ்ரான் வெளியிட்டுள்ள திட்டத்தின் படி 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உலகளாவிய பணியாளர்களின் எண்ணிக்கையை 15 முதல் 20 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணிநீக்கம் வாயிலாக நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், செலவுகளைக் குறைத்தல் மற்றும் நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சியை மேம்படுத்துதல் என்ற பல முக்கிய இலக்குகளை அடைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதை தாண்டி இப்பணிநீக்கத்திற்கு மற்றொரு காரணமும் உண்டு. ஹெஸ் நிறுவனத்தை (HESS) கையகப்படுத்த செவ்ரான் முன்மொழிந்த நிலையில், எக்ஸான்மொபிலுடன் (EXXON MOBIL) சட்டப்பூர்வ போராட்டத்தை எதிர்கொண்டு உள்ளது, இதில் பலதரப்பட்ட இழப்புகள் ஏற்படும் ஆபாயம் உள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், செவ்ரான் நிறுவனத்தின் சுத்திகரிப்பு லாப வரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், சுத்திகரிப்புப் பிரிவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது 2020 க்குப் பிறகு ஏற்பட்ட முதல் நஷ்டமாகும்.
இந்த பணிநீக்கம் மற்றும் இதர செலவு குறைப்பு நடவடிக்கை மூலம் 2026 ஆம் ஆண்டுக்குள் 3 பில்லியன் டாலர் வரையில் சேமிக்க செவ்ரான் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் இறுதியில், செவ்ரானின் உலகளாவிய பணியாளர்களின் எண்ணிக்கை 40,212 ஆக இருந்தது. தற்போது 20 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் என்பது சுமார் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட உள்ளது.


Click it and Unblock the Notifications