அமெரிக்க டெக் நிறுவனங்கள் மோசமான வர்த்தக சூழ்நிலை காரணமாக அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்தாலும், தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்துவதை நிறுத்தவில்லை. அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருந்து திறமையான ஊழியர்களை தேடி தேடி நியமிக்கும் பணிகளை நிறுத்தவில்லை.
இப்படியிருக்கும் வேளையில் அமெரிக்காவின் முன்னணி டெக் சேவை நிறுவனங்களான கூகுள், மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட், சேல்ஸ்போர்ஸ் ஆகியவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்திடம் முக்கியமான கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கை மட்டும் நிறைவேறிவிட்டால் இந்திய ஐடி ஊழியர்கள் அமெரிக்காவுக்கு பறக்கலாம்.

இந்தியா ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் அமெரிக்காவில் சில வருடம் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும், இன்னும் சிலரோ அமெரிக்காவிலேயே செட்டிலாக வேண்டும் என திட்டமுடனும் இயங்கி வருகின்றனர். இந்த அமெரிக்க கனவை நினைவாக்கும் முதல் படி தான் விசா, இது தொடர்பாக தான் டாப் நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளது.
கூகுள், மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட், சேல்ஸ்போர்ஸ் போன்ற அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதியில் இருக்கும் முன்னணி நிறுவனங்களின் கூட்டமைப்பான Compete America, தற்போது இருக்கும் 85000 என்ற ஹெச்1பி விசா எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என ஜோ பைடன் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
தற்போது அளிக்கப்படும் விசா தங்களுடைய வர்த்தக தேவையையும், ஆட்கள் பற்றாக்குறையையும் பூர்த்தி செய்யவில்லை, இதனால் விசா எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று ஜோ பைடன் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கை மனுவை Compete America அமைப்பு Department of Homeland Security துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆட்சி மாறும் முன்பு முக்கிய முடிவை எடுப்பதற்காக ஜோ பைடன் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு ரிபப்ளிக் கட்சி சார்பாக மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியை பிடித்து அதிபர் ஆனால் ஹெச்1பி விசா மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவில் முன்னணி டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு பலர் வேலையில்லாமல் இருக்கும் நிலையில் கூகுள், மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட், சேல்ஸ்போர்ஸ் போன்ற அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதியில் இருக்கும் முன்னணி நிறுவனங்களின் கூட்டமைப்பான Compete America-வின் கோரிக்கை வியப்பு அளிக்கிறது.
2022 ஆம் நிதியாண்டில் மட்டும் அமெரிக்க அரசு சுமார் 4.4 லட்சம் ஹெச்1பி விசா விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இதில் சுமார் 3.2 லட்சம் விசா விண்ணப்பங்கள் இந்தியர்களின் விண்ணப்பம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மொத்த ஹெச்1பி விசா விண்ணப்பத்தில் இந்தியர்கள் சுமார் 72.6 சதவீத விசாக்களை பெற்றுள்ளனர்.
இந்தியாவை தொடர்ந்து சீனா சுமார் 55,038 ஹெச்1பி விசா விண்ணப்பங்களை பெற்றுள்ளது, இது மொத்த எண்ணிக்கையில் 12.5 சதவீதமாகும். 3வது இடத்தில் கனடா உள்ளது, 2022 ஆம் நிதியாண்டில் அண்டை நாடான கனடாவுக்கு அமெரிக்கா 4,235 விசா விண்ணப்ப ஒப்புதல்கள் அளிக்கப்பட்டு உள்ளது, இது மொத்த எண்ணிக்கையில் 1 சதவீதமாகும்.


Click it and Unblock the Notifications