உலகம் முழுவதும் டெக் நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கூகுள் நிறுவனமும் தங்களுடைய வேலைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பெருமளவில் இணைத்து வருகிறது. கோடிங் உள்ளிட்ட மனிதர்கள் திரும்ப திரும்ப செய்யக்கூடிய வேலைகள் ஏஐ வசம் சென்று வருகின்றன.
ஏஐ பயன்பாடு: பெரிய டெக் நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஏஐ ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. செயல்திறன் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்த ஏஐ முக்கியம் என்ற மனநிலைக்கு டெக் நிறுவனங்கள் வந்துவிட்டன. இந்த சூழலில் கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஊழியர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கியமான ஒரு அறிவுரையை வழங்கியிருக்கிறார் . இந்த ஏஐ காலத்தில் ஊழியர்கள் எப்படி வேலையை அணுக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏஐ வசம் செல்லும் வேலைகள்: கூகுள் ஏஐ தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருவதற்கு முன்னுரிமை அளித்து வரும் அதே வேளையில் தங்களுடைய நிறுவன செயல்பாட்டிலும் பெருமளவு ஏஐ பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்கள், அதிக ஏஐ பயன்பாடு, சிறந்த செயல்திறன் , அதிக உற்பத்தி திறன் என்பதை இலக்காக கொண்டு கூகுள் நிறுவனம் படிப்படியாக தங்கள் வேலைகளை ஏஐ வசம் ஒப்படைத்து வருகிறது .
சுந்தர் பிச்சை அறிவுரை: கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூகுள் ஊழியர்களுடன் நடத்திய முக்கியமான ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய வேலையில் அதிக அளவில் ஏஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும் என அறிவித்திருக்கிறார். உதாரணமாக வேலை செய்யும் போது நீங்கள் உதவிக்காக உங்கள் அருகில் இருக்கும் சக ஊழியரை நாடாமல் ஏஐ பயன்படுத்துங்கள் என கூறியிருக்கிறார்.
அதிக செயல்திறன்: எந்த எந்த ஒரு துறையிலும் ஒரு பெரிய மாற்றம் வரும் போது நாம் அதற்கு ஏற்ற அளவில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்போம் ஆனால் இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை அந்த தேவையை குறைத்து இருக்கிறது. நாம் குறைந்த ஊழியர்களைக் கொண்டே ஏஐ உதவியோடு அதிக செயல் திறனை வெளிப்படுத்த முடியும் என்பது தற்போது சாத்தியமாகி இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
ஏஐ அதிகம் பயன்படுத்துங்கள்: ஊழியர்கள் அனைவரும் வேலை செய்யும்போது அதிக அளவில் ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார் . கூகுள் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்திருப்பதாக தெரிவித்திருக்கும் அவர் 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் ஏஐ தொழில்நுட்பத்திற்கான முதலீட்டை 85 பில்லியன் டாலர்கள் வரை உயர்த்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications