இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வழக்கறிஞரான உஷா சிலுக்குரி வான்ஸ், கடந்த 12 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளார்.
அமெரிக்காவில் பொது தேர்தல் விரைவில் நடக்க இருக்கும் வேளையில், அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், தனது துணை அதிபர் பதவிக்கு ஜே.டி.வான்ஸ்-ஐ தேர்வு செய்தார்.ஜே.டி.வான்ஸ் மனைவி தான் உஷா வான்ஸ்.

ஜோ பைடன் அரசின் துணை முதல்வராக இருக்கும் கமலா ஹாரீஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், பிரிட்டன் அரசின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகிய இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவர்.
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்தால் இந்திய வம்சாவளியை சேர்ந்த யாருமே இல்லையே என்ற கேள்விக்கு பதிலாக மாறியுள்ளார், டிரம்ப்-ன் துணை அதிபர் தேர்வான ஜே.டி.வான்ஸ்-ன் மனைவி உஷா வான்ஸ்.

இந்திய பெற்றோர்களுக்கு மகளாக பிறந்த உஷா வான்ஸ், அந்நாட்டு தேசிய சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். பிற இந்திய வம்சாவளி இந்தியர்களைப் போலவே உஷா சிலுக்குரி-யும் பிடிப்பில் கெட்டி. இவர் யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் பட்டம் பெற்றுள்ளார்.
இதை தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு புகழ்பெற்ற சட்ட நிறுவனத்தில் ஒரு கார்ப்பரேட் வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் மற்றும் நீதிபதி பிரட் கவனாக்-ன் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில் இருவருக்கும் கிளார்க் ஆக பணியாற்றியுள்ளார்.

கலிபோர்னியாவின் சான் டியாகோ பகுதியில் வளர்ந்த உஷா கல்வி மற்றும் கடின உழைப்புக்குப் பெயர்போனவர். இதேவேளையில் இவருடைய அரசியல் பயணம் என்பது கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கேட்ஸ் பெல்லோ-வாக இருந்த போது, உஷா சிலுக்குரி இடதுசாரி மற்றும் லிப்ரெல் குழுக்கள் உடன் பணியாற்றினார். இதன் பின்னர் 2014 இல் முறையாக டெமாக்ரடிக் கட்சியில் இணைந்தார்.
உஷா சிலுக்குரி-யும் ஜே.டி.வான்ஸ்-ம் முதன்முதலில் யேல் சட்டப் கல்லூரியில் சந்தித்தனர், இவர்களுக்கு மத்தியில் காதல் வளர்ந்து 2014 இல் கென்டக்கி நகரத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணம் இந்து முறைப்படி நடந்தது. தற்போது உஷா - ஜே.டி.வான்ஸ் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

உஷா வான்ஸ் தனது கணவரின் அரசியல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். டொனால்ட் டிரம்ப், தனது துணை அதிபர் பதவிக்கு ஜே.டி.வான்ஸ்-ஐ தேர்வு செய்திருப்பது அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் நம்பிக்கை பெறும் கணக்காக கூட இருக்கலாம்.
இதேவேளையில் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு படித்து முடித்த உடனே கிரீன்கார்டு அளிப்பதாக பேசியது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டு முக்கிய பேசுபொருளாக இருந்தது.


Click it and Unblock the Notifications