சென்னை: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டுடன் போட்டிப்போடும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல் செமிகண்டக்டர் தொழிற்பூங்கா கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜெவர் பகுதியில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம் அருகே அமைக்கப்பட உள்ளது.
இந்த செமிகண்டக்டர் தொழிற்பூங்காவில் மூன்று நிறுவனங்கள் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைக்க இதுவரையில் ஒப்புதல் பெற்றுள்ளன. இந்த 3 நிறுவனத்தின் தொழிற்சாலைக்காக உத்தரப் பிரதேச அரசு, செக்டார் 10 மற்றும் செக்டார் 28ல் மொத்தம் 225 ஏக்கர் நிலத்தில் செமிகண்டக்டர் சிப் டெஸ்டிங் ஆலை தயாரிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

யமுனா வளர்ச்சி ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் வீர் சிங் இதுகுறித்து கூறுகையில் சுமார் 50 ஏக்கர் நிலம் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைக்க செக்டர் 10-ல் கேனஸ் செமிகான் பிரைவேட் லிமிடெட் மற்றும் வாமா சுந்தரி இன்வெஸ்ட்மெண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதோடு 125 ஏக்கர் நிலம் மற்றொரு நிறுவனத்திற்கு செக்டர் 28-ல் ஒதுக்கப்படும். இந்த நிறுவனங்களின் ஒப்புதல் தற்போது மத்திய அரசிடம் இருந்து பெற காத்திருக்கிறது. ஒப்புதல் பெற்ற பின்பு 3 நிறுவனங்களும் தங்களது கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும், இதோடு இதன் வளர்ச்சியை மாநில அரசு கூர்ந்து கவனிக்கும் என தெரிவித்துள்ளார்.
வாமா சுந்தரி இன்வெஸ்ட்மெண்ட் அமைக்கும் தொழிற்சாலையில் மொத்தம் 13,780 பேர் வேலைவாய்ப்பு பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாதத்திற்கு 2.40 லட்சம் சிப்ஸ் தயாரிக்கும் மற்றும் 19 MW மின்சாரம் மற்றும் 2,000 MLD தண்ணீர் தேவைப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் கேனஸ் காம் நிறுவனமும் தனது 50 ஏக்கரில் அமைக்கும் தொழிற்சாலைக்கு MVA அளவிலான மின்சாரம் தேவைப்படும். மூன்றாவது TURCK நிறுவனத்திற்கு 125 ஏக்கர் நிலம் யமுனை வளர்ச்சி ஆணையத்தால் வழங்கப்படும். மூன்று நிறுவனங்களும் ஒதுக்கப்பட்ட மூன்று பகுதிகளில் ரூ. 40,000 முதல் 80,000 கோடி வரை முதலீடு செய்யும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications