பொதுவாக வயதான காலத்தில் புதிய பிஸ்னஸ் துவங்குவோருக்கு உத்வேகம் அளிக்க KFC நிறுவனத்தை உருவாக்கிய Harland Sanders-ஐ உதாரணமாக கூறுவார்கள், இவர் ராணுவத்தில் பணியாற்றி விட்டு 40 வயதில் பிஸ்னஸ் துவங்கியதை பலரும் வியந்து பேசுவார்கள்.
இங்கே வெங்கடசாமி ஜெகநாதன் என்ற தமிழர் தனது 79 வயதில் புதிய பிஸ்னஸ் துவங்க போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஒட்டுமொத்த இந்திய நிதி துறையே காத்திருக்கிறது. யார் இந்த வெங்கடசாமி ஜெகநாதன்..?

இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் துறை இவர் வருவதற்கு முன்பு வரையில் மிகவும் காஸ்ட்லியான துறையாக இருப்பது மட்டும் அல்லாமல் இப்பிரிவில் வர்த்தகம் செய்யும் யாரும் லாபம் அடைந்தது இல்லை. இப்படியிருக்கையில் தான் வெங்கடசாமி ஜெகநாதன் ஹெல்த் இன்சூரன்ஸ் துறைக்குள் நுழைந்தார்.
வெங்கடசாமி ஜெகநாதன் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர், படிப்பை முடித்ததும் 1970 ஜூன் 3 ஆம் தேதி Hercules Insurance நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார், சில வருடத்தில் இந்தியாவின் மாபெரும் இன்சூரன்ஸ் நிறுவனமான யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக சேர்ந்தார்.
வெங்கடசாமி ஜெகநாதன் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநராக பெறுப்பேற்ற 2001க்கு முன்பு 50 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கியது. 2004ல் இப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வெளியேறிய போது 400 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டும் நிறுவனமாக மாறியது.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு பலரும் நம்மதியாக வீட்டில் நாட்களை கழிக்கலாம் என்று தான் ஆசைப்படுவார்கள், ஆனால் வெங்கடசாமி ஜெகநாதன் ஒய்வு பெற்ற 2 வருடத்தில் சென்னையி் மாதா சர்ச் சாலையில் 30000 ரூபாய் வாடகையில் 12 ஊழியர்கள் உடன் Star Health and Allied Insurance நிறுவனத்தை மே 2006ல் உருவாக்கினார்.
ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தை பற்றி இன்று அறியாதவர்கேளே இல்லை என்று கூறும் அளவுக்கு பிரபலம். இது மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் அதிகப்படியான வர்த்தக பங்கீட்டை கொண்டு இருக்கும் நிறுவனமாகவும் உள்ளது. இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள ஸ்டார் ஹெல்த் நிறுவனம் சுமார் 30,520 கோடி ரூபாய் மதிப்புடன் உள்ளது.
இந்த நிலையில் 79 வயதான வெங்கடசாமி ஜெகநாதன் சமீபத்தில் சிஇஓ பதவியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார், ஆனால் ஜூன் மாத 10 முதல் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் நிர்வாக குழு பொறுப்பில் இருந்து விலகுவதாக பங்குச்சந்தைக்கு தெரிவித்தார்.
ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகிய வெங்கடசாமி ஜெகநாதன் அடுத்த 2 மாதத்தில் புதிய பிஸ்னஸ் துவங்க உள்ளதாகவும், இதுக்குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், இது புதிதாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய இன்சூரன்ஸ் துறையில் 50 வருடம் அனுபவம் கொண்ட வெங்கடசாமி ஜெகநாதன் 79 வயதில் புதிய பிஸ்னஸ் துவங்குகிறார் என்றால் கட்டாயம் மிகப்பெரிய விஷயம் இருக்கும் என்பது தான் சந்தையின் கணிப்பு. இல்லையெனில் 79 வயதில் ரிஸ்க் எடுக்க என்ன அவசியம் என்ற கேள்வி முன் வைக்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications