வடோதரா: வெப்பமான கோடை மாதங்களில், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகமாக உள்ளன. சுட்டெரிக்கும் வெயிலில் மணிக்கணக்கில் நின்று, நகர்ப்புற சாலைகளின் போக்குவரத்தை சரி செய்யும் இவர்களுக்கு, இடைவிடாத வெப்பத்தின் காரணமாக அடிக்கடி கடுமையான அசௌகரியத்தையும் உடல்நல அபாயங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்நிலையில், வெயிலில் பணி புரியும் போலீசாருக்கு குளிரூட்டப்பட்ட (ஏசி) ஹெல்மெட் வழங்கப்பட்டு வருகிறது.
கடும் வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு, வடோதரா காவல்துறை ஏசி ஹெல்மெட் வழங்கியுள்ளது. தற்போது வைரலாகும் வீடியோக்களில், போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை வெயிலில் நின்று சரி செய்யும்போது , இந்த வகை சிறப்பு ஹெல்மெட் அணிந்து காணப்படுகின்றனர்.

இந்த புதிய ஏசி ஹெல்மெட்டுகள் அதிகபட்சமாக 40 - 42 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் குளிரூட்டும் வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஹெல்மெட்டுகள் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வருகிறது. சூரிய ஒளியில் இருந்து கண்களைப் பாதுகாக்க உதவும் "Visor" மற்றும் சார்ஜிங் பாயிண்ட் உள்ளது. இந்த ஹெல்மெட்களுக்கு முழுமையாக சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரம் வரை தலையை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
உஷ்ணத்தால் அதிகாரிகள் சாலையில் மயங்கி விழுந்த சம்பவங்களும் உண்டு. இதுவே இந்த ஏசி ஹெல்மெட் வழங்கப்படும் நடவடிக்கைக்குக் காரணம். இந்த ஏசி ஹெல்மெட்களை சோதனை அடிப்படையில் போக்குவரத்து போலீஸ் அதிகாரி பயன்படுத்தி பார்த்துவிட்டு, இதனை அணிவது வசதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஏசி ஹெல்மெட் அணிந்த மூன்று போக்குவரத்து காவலர்கள் சாலையில் நிற்பதை ANI நியூஸ், தனது அதிகாரபூர்வ X தளத்தில் விடியோவாக பகிர்ந்துள்ளது.
இந்த நடவடிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது பலனளிக்கும் நடவடிக்கை என பலரும் பாராட்டியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த, ஒரு X பயனர், "இது ஒரு சிறந்த முயற்சி. மற்ற மாநிலங்களின் போக்குவரத்துத் துறைகளும் இந்த முயற்சியைப் பின்பற்ற வேண்டும். ஒடிசா காவல் துறை இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிசீலிக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போக்குவரத்து டிசிபி ஆர்த்தி சிங் கூறுகையில், "தற்போது, நகரின் 6 முக்கிய பிரிவுகளில் நியமிக்கப்பட்டுள்ள போக்குவரத்து காவலர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தும் முயற்சி மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. விரைவில், இந்த ஏசி ஹெல்மெட்கள், நகரின் பிற பகுதிகளில் இருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்படும்" என ANI செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஹெல்மெட்களின் முதன்மை அம்சம், மினியேச்சர் ஏர் கண்டிஷனிங் யூனிட்கள். சின்ன ஹெல்மெட் தயாரிப்பில், புத்திசாலித்தனமாக ஏசி போன்ற வசதி பொருத்தப்பட்டுள்ளது. ரிச்சார்ஜபிள் பேட்டரிகள் மூலம் இயக்கப்படும், இந்த கச்சிதமான குளிரூட்டும் ஹெல்மெட்கள், அதனை அணிபவருக்கு புத்துணர்ச்சியூட்டும் மைக்ரோ க்ளைமேட்டை உருவாக்குகிறது. இது உடல் வெப்பநிலையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், வெளிப்புறச் சூழலில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் பொதுவான சிக்கல்களான வெப்பச் சோர்வு மற்றும் டீஹைட்ரேஷன் போன்ற வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது.


Click it and Unblock the Notifications