வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட ரயில் ஆறு மாதங்களில் செயல்பாட்டிற்கு வர உள்ளது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வந்தே பாரத்தின் ஸ்லீப்பர் வகை ரயில்களின் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
இந்தியாவில் பாஜக அரசின் பிரதான திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது வந்தே பாரத் ரயில்கள். வந்தே பாரத் ரயில்கள் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுபவை. மேதா சர்வோ டிரைவ்ஸ் லிமிடெட் நிறுவனம் சுவிஸ் ரயில்வே நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ஸ்டாட்லர் ரயில் அமைப்பை பயன்படுத்தி இந்த அதிவிரைவு ரயில்கள் சென்னை, பெரம்பூரில் இருக்கும் ஐ சி எஃப் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்க ஏலம் விண்ணப்பம் கொடுத்து வெற்றப்பெற்றதும் மேதா சர்வோ - சுவிஸ் ரயில்வே கூட்டணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரயில் பெட்டிகள் முழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. இணைய வசதி, எல் ஈ டி தொலைக்காட்சிப் பெட்டி, எக்ஸிகியூட்டிவ் வகுப்பு, பொது வகுப்பு என பல அம்சங்களை கொண்டது. இதில் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் உள்ள இருக்கைகளை சுழலும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் எஞ்சின் இல்லாத இந்த ரயில்கள் 750 கி.மீ. தூரத்தை சுமார் 8 மணி நேரத்தில் கடக்கும்.
தற்போது வெறும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை 32ஆக உள்ளது. வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை அடுத்து படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ஆறு மாதங்களில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா ஆகிய ரூட்டில் முதல் கட்டமாக இந்த ஸ்லீப்பர் ரயில்கள் தொடங்கப்பட உள்ளன. இந்த மாதமே இதற்கான சோதனை ஓட்டங்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் சிறப்பு மேற்கூரை, அதி நவீன ஏசி வசதி , வைரஸ் கட்டுப்பாடு அமைப்புகள் மற்றும் சத்தம், அதிர்வு ஆகியவை தெரியாத வகையில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வந்தே ஸ்லீப்பர், வந்தே சேர் கார் மற்றும் வந்தே மெட்ரோ ஆகிய மூன்று ரயில்களிலும் பயணிகளின் கருத்துகள் அடிப்படையில் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சிறப்பம்சங்களில் ஒன்று ஷாட் வாட்டர் ஷவர். அதாவது முதல் தர ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு சூடு தண்ணீர் வசதி கிடைக்கும். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் உள்ளன. இதன் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டராக இருக்கும்.

சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 180 கிலோமீட்டர் வரை சோதிக்கப்படும். முழுக்க முழுக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெட்டிகள், பயணிகள் பாதுகாப்பு வசதிகள், ஜிஎஃப்ஆர்பி பேனல்கள், ஏரோடைனமிக் எக்ஸ்டீரியர் டிசைன் ஆகிய அம்சங்கள் இதில் உள்ளன.
மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு தானியங்கி கதவுகள், சென்சார் அடிப்படையில் இயங்கும் கதவுகள், ரிமோட் மூலம் இயக்க கூடிய கதவுகள், கழிப்பறைகள், படிப்பதற்கான பிரத்யேக விளக்குகள், யுஎஸ்பி சார்ஜிங் அமைப்புகள் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
அதே வேளையில் அம்ரித் பாரத் ரயிலிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. பெங்களூரு மற்றும் மால்டா இடையிலான அம்ரித் பாரத் ரயில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் , கூடுதலாக 100 அம்ரித் பாரத் ரயில்களை தயாரிக்க இருப்பதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications