டெல்லி: உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் அமைந்திருக்கக் கூடிய நாடு இந்தியா. மக்களின் தேவைக்கேற்பவும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்பும் நமது ரயில்வே துறையானது பல வழிகளில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அப்படி கொண்டு வரப்பட்ட வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. எனவே இதன் அடுத்த கட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இன்னும் இரண்டு மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தொடர்பான தொழில்நுட்ப வேலைகள் அனைத்தும் இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று இரண்டு மாதங்களில் இது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அறிவித்துள்ளார்.
பிஇஎம்எல் லிமிடெட் தயாரித்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் பெங்களூருவில் உள்ள ரயில் யூனிட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உலகத்தரம் வாய்ந்த பல்வேறு நவீன வசதிகள் இந்த ரயிலில் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்லீப்பர் ரயில்களை பொறுத்தவரை இது முழுக்க முழுக்க உயர்தரத்திலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு நவீன அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அனைத்து பாதுகாப்பு தர நிலைகளும் பின்பற்றப்பட்டு இந்த ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார். பார்ப்பதற்கு அழகாகவும் சிறந்த செயல் திறன் கொண்டதாகவும் இந்த ரயில்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என அவர் பாராட்டினார். இந்த ரயிலின் இருக்கைகள் மற்றும் படுக்கைகள் ,உள்புற கட்டமைப்புகள் என அனைத்துமே உலக தரத்தில் தயார் செய்யப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் செமி ஹை ஸ்பீடு ரயில்கள் இவை என அவர் குறிப்பிட்டுள்ளார். பயணிகளுக்கு சிறந்த அனுபவம் தரக்கூடியவையாக இந்த ரயில்கள் அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், தற்போது செயல்பாட்டில் இருக்கக்கூடிய ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மாற்றாக கொண்டுவரப்படுகிறது.
அதாவது நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு ஒரு பிரீமியமான பயண அனுபவத்தை வழங்குவதற்காகவே இந்த ரயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன.
இவை மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. தற்போது இருக்கக்கூடிய வந்தே பாரத் ரயில்களைப் போலவே இதிலும் ஜிஎஃப்ஆர்பி பேனல்கள், ஆட்டோமேட்டிக் கதவுகள் மற்றும் ஃபர்ஸ்ட் ஏசி பிரிவில் சுடுதண்ணி கிடைக்கக்கூடிய வசதி, நவீன கழிவறை குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட படுக்கைகள் மற்றும் கழிவறைகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
800-க்கும் அதிகமான பயணிகள் சௌகரியமாக பயணிக்கும் வகையில் இந்த ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 1 AC First Class, 4 AC Two-Tier, 11 AC Three-Tier என 16 பெட்டிகளுடன் முதல் கட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications