ராஜஸ்தான் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் இந்தியாவில் 14வது வந்தே பாரத் ரயில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இப்புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டெல்லி கண்டோன்மென்ட் முதல் அஜ்மீர் வரையில் செல்கிறது. சுமார் 5 மணிநேரம் 15 நிமிடகள் பயண நேரம் கொண்ட இந்த வழித்தடத்தில் ஜெய்ப்பூர், அல்வார் மற்றும் குர்கான் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தனது சேவையை ஏப்ரல் 13, 2023 முதல் தொடங்கும்.

மக்கள் மத்தியில் வந்தே பாரத் ரயில்களுக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவைகளை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் ரயில்வே துறை சுமார் 80 ஸ்லீப்பர் ரயில்களை ஆர்டர் செய்துள்ளது.
BHEL மற்றும் Titagarh Wagons கூட்டமைப்பு இந்த 80 ஸ்லீப்பர் கிளாஸ் வந்தே பாரத் ரயில்களை வழங்குவதற்கான ஆர்டரைப் பெற்றுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கான மிகப்பெரிய ரயில்வே டெண்டர்களில் ஒன்றாக இது விளங்குகிறது, இந்த இரு நிறுவனங்களின் கூட்டணி ரயில்களை தயாரிப்பது மட்டும் அல்லாமல் 35 ஆண்டுகளுக்கு ரயில்களின் விரிவான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும்.
ஒரு ரயிலுக்கு சுமார் 120 கோடி ரூபாய் வீதம் 80 ரயில்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. BHEL தலைமையிலான கூட்டமைப்பு 72 மாதங்களுக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்.

இதற்கிடையில் BHEL வெளியிட்ட அறிக்கையில், கடுமையான போட்டிக்கு மத்தியில் L2 ஏலத்தில் எங்களுடைய கூட்டணி வென்று 80 வந்தே பாரத் ரயில்களுக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளோம். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 23,000 கோடி ரூபாய்க்கும் மேல்.
ஆர்டர் மதிப்பில் ரூ.9,600 கோடிக்கு ரயில் பெட்டிகளை தயாரித்து சப்ளை செய்வதற்கு மட்டும். மீதமுள்ள தொகை 35 ஆண்டுகளுக்குப் பராமரிப்புக்கான தொகை. BHEL மற்றும் Titagarh Wagons கூட்டணி உருவாக்கும் ரயில்கள் 176 / 160kmph வரையிலான வேகத்திற்கு செல்லும்.


Click it and Unblock the Notifications