பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பிரதான திட்டங்களில் ஒன்று வந்தே பாரத் ரயில் திட்டம். மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படையில் முற்றிலும் இந்தியாவிலேயே இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
விமானத்துக்கு நிகரான வசதி மற்றும் வேகம், பாதுகாப்பு ஆகியவற்றால் வந்தே பாரத் ரயில்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: வந்தே பாரத் ரயில்களால் ஈர்க்கப்பட்டு சிலி நாடுகள் தங்களுக்கு விற்பனை செய்யும் படி கோரிக்கை வைப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் விரைவில் வந்தே பாரத் ரயில்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
உலக தொழில் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இதனை அறிவித்தார். "நமது பொறியாளர்களை கொண்டே முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பாக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்பட்டு வெற்றி கண்டுள்ளன எனவும் கூறினார்.
வரும் ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில்கள் ஏற்றுமதி செய்யப்படும் என உறுதியாக கூறினார். வந்தே பாரத் ரயில்கள் குறித்து நல்ல கருத்துகள் வந்துள்ளதாக தெரிவித்த அவர் , படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
தற்போது 82 ரயில்கள் இயக்கம்: தற்போது நாட்டில் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 82ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வந்தே பாரத் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக டெல்லி - மும்பை, டெல்லி - ஹவுரா இடையிலான வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 160 கிலோமீட்டராக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயில்களின் சிறப்பம்சம்: வந்தே பாரத் ரயில்கள் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுபவை. ஜப்பான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அதிவிரைவு ரயில்கள் சென்னை, பெரம்பூரில் இருக்கும் ஐ சி எஃப் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. ரயில்பெட்டிகள் முழுக்க குளிர்சாதன வசதி கொண்டது.
இணைய வசதி, எல் ஈ டி தொலைக்காட்சிப் பெட்டி, எக்ஸிகியூட்டிவ் வகுப்பு, பொது வகுப்பு என பல அம்சங்களை கொண்டது. இதில் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் உள்ள இருக்கைகளை சுழலும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் எஞ்சின் இல்லாத இந்த ரயில்கள் 750 கி.மீ. தூரத்தை சுமார் 8 மணி நேரத்தில் கடக்கும். இவ்வகையான வந்தே பாரத் ரயில்களுக்கான வெள்ளோட்டம் 2019 ஆம் ஆண்டிலேயே துவக்கப்பட்டு விட்டது.
Story written by: Devika Manivannan


Click it and Unblock the Notifications