மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதலின்படி, இனி அரசு சார்ந்த குறிப்பிட்ட நிகழ்வுகளில் 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயம் இசைக்கப்படவோ அல்லது பாடப்படவோ வேண்டும். ஆறு சரணங்களைக் கொண்ட இப்பாடல் 3 நிமிடங்கள் 10 வினாடிகள் நீடிக்கும். தேசிய கொடியேற்றும் விழாக்கள், குடியரசுத் தலைவர் பங்கேற்கும் முக்கிய நிகழ்வுகளிலும் வந்தே மாதரம் இசைக்கப்படும். தேசிய கீதமான ஜன கன மன 52 வினாடிகள் மட்டுமே நீடிக்கும்.
பத்ம விருதுகள் வழங்குவது போன்ற கௌரவிப்பு விழாக்கள், குடியரசுத் தலைவர் வருகை-புறப்பாடு நிகழ்வு மேடைகளிலும் வந்தே மாதரம் இசைக்கப்படும். வந்தே மாதரமும் , ஜன கன மனவும் இசைக்கப்படும்போது, தேசியப் பாடலே முதலில் வரும். அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் வந்தே மாதரத்திற்கு எழுந்து நிற்க வேண்டும்; ஆனால், சினிமா அரங்குகளில் இது பொருந்தாது.

அங்கீகரிக்கப்பட்ட பாடல் வடிவம், கால அளவு குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பள்ளிகள் தங்கள் தினசரி நடவடிக்கைகளை தேசிய கீதத்துடன் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டுகால கொண்டாட்டங்களைத் தொடங்கிவைத்ததை அடுத்து இந்த அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பாடலைக் கவுரவிக்கும் விதமாக, பிரதமர் ஒரு நினைவார்த்த அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டு இக்கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்தார். நவம்பர் 7, 2025 முதல் நவம்பர் 7, 2026 வரை இக்கொண்டாட்டங்கள் ஒரு வருடம் நடைபெறும்.
வந்தே மாதரம் பாடல் 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி அக்ஷய நவமியை முன்னிட்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் இயற்றப்பட்டது. இப்பாடல் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் முழக்கமாகவும், தேசியப் பெருமையின் சின்னமாக இன்றும் விளங்குகிறது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் இத்தேசியப் பாடல் குறித்த விவாதங்கள் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான கருத்துப் பரிமாற்றங்களுடன் நடந்தன.


Click it and Unblock the Notifications