இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமான வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால்-ன் மகன் அக்னிவேஷ் அகர்வால் 49 வயதில் காலமானார். இந்த அதிர்ச்சி செய்தி ஜனவரி 8 (இன்று) வெளியானது. அமெரிக்காவின் நியூயார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அக்னிவேஷ் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அக்னிவேஷ் சமீபத்தில் ஸ்கீயிங் (பனிச்சறுக்கு விளையாட்டு) விபத்தில் காயமடைந்து நியூயார்க்கின் மவுண்ட் சினாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்ரு, நன்றாக குணமடைந்து வந்த நிலையில் திடீரென உடல்நிலை மோசமடைந்தது திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அவருடைய குடும்பம் தெரிவித்துள்ளது.

1976 ஜூன் 3ஆம் தேதி பாட்னாவில் பிறந்த அக்னிவேஷ் அகர்வால், அஜ்மேரில் உள்ள மயோ கல்லூரியில் படித்தார். தொழில் துறையில் முக்கிய பங்களிப்புகளை அளித்த அவர், ஃபுஜைரா கோல்ட் நிறுவனத்தை நிறுவி, இதில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றினார். அக்னிவேஷ்-ன் தந்தை அனில் அகர்வால் அடுத்தடுத்து பல பதிவுகளை வெளியிட்டார்.
இந்த இழப்பை வாழ்வின் மிக இருண்ட நாள் என்று கூறிய அனில் அகர்வால், எக்ஸ் தளத்தில் உணர்வுப்பூர்வமான பதிவு வெளியிட்டார். மகனுடன் இணைந்து உருவாக்கி கனவை நினைவு கூர்ந்த அவர், எந்தக் குழந்தையும் பசியுடன் தூங்கக்கூடாது, கல்வி மறுக்கப்படக்கூடாது, ஒவ்வொரு பெண்ணும் சுயமாக நிற்க வேண்டும், இளைஞர்கள் அனைவருக்கும் அர்த்தமுள்ள வேலை கிடைக்க வேண்டும் என்ற கனவுகளை இருவரும் இணைந்து கண்டதாக குறிப்பிட்டார். இதற்காக தாங்கள் சம்பாதிக்கும் செல்வத்தில் 75 சதவீதத்துக்கு மேல் மீண்டும் மக்கள் மற்றும் சமூக மாற்றத்திற்காக வழங்குவோம் என்று அக்னிவேஷுக்கு வாக்குறுதி அளித்திருந்ததாக தெரிவித்தார்.
மகனின் இழப்புக்குப் பிறகு அனில் அகர்வால் தனது நீண்டகால உறுதிமொழியை மீண்டும் டிவிட்டர் பதிவு வாயிலாக வலியுறுத்தியுள்ளார். சம்பாதித்த செல்வத்தில் 75 சதவீதத்துக்கு மேல் சமூக நலனுக்காக வழங்குவோம் என்ற உறுதிமொழியை தொடர்ந்து கடைப்பிடிப்பேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications