இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களான அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா லிமிடெட் மாபெரும் மறுசீரமைப்பு பணிகளில் இறங்கியுள்ளது. வேதாந்தா குழுமம் தனது வணிகங்களை தனித்தனியாக பிரித்து பல நிறுவனங்களாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட தயாராகி வருகிறது.
இந்த திட்டம் மட்டும் வெற்றியடைந்தால், அனில் அகர்வால் தனது உலோகங்கள் முதல் எனர்ஜி வரையில் இயங்கும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் கடன் சுமையை சமாளித்து எளிதாக நிர்வகிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

அனில் அகர்வால் அடுத்தடுத்து பல தோல்விகளை எதிர்கொண்டு வரும் வேளையில் கடன் சுமை அவரை விடாமல் துரத்துகிறது. இப்படியிருக்கையில் பாக்ஸ்கான் உடனான கூட்டணி அனில் அகர்வால்-க்கு பெரும் நம்பிக்கையை கொடுத்த நிலையில் இக்கூட்டணி மொத்தமாக உடைந்தது.
இதேபோல் புதிய கடன்களை ஈர்க்க முடியாமல் பல முறை தோல்வி அடைந்த நிலையில், கிட்டத்தட்ட கடைசி வாய்ப்பாக பங்குச்சந்தையை நம்பி களத்தில் இறங்கியுள்ளார் அனில் அகர்வால். கடந்த சில நாட்களாக வேதாந்தா பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவது பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

வேதாந்தா குழுமம் தனது வணிகங்களை தனித்தனியாக பிரித்து பல நிறுவனங்களாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட தயாராகி வரும் திட்டத்தை இந்நிறுவனம் அதன் கடன் வழங்குநர்களிடம் தெரிவித்துள்ளது. இதற்கான மறுசீரமைப்பை பணிகளை துவங்க உள்ளதாகவும் வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த திட்டத்தை வரும் நாட்களில் பொது மக்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேதாந்தா குழுமம் அலுமினியம், எண்ணெய் மற்றும் எரிவாயு, இரும்புத் தாது மற்றும் ஸ்டீல் உள்ளிட்ட வணிகங்கள் தனித்தனியாக பிரித்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட ஆலோசனைகள் நடந்து வருகிறது.

மேலும் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Vedanta Resources தொடர்ந்து ஹோல்டிங் நிறுவனமாக இருக்கும். இதற்கான ஆலோசனை தொடர்ந்து நடைப்பெற்று வரும் வேளையில் எவ்விதமான முடிவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இன்று வேதாந்தா பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 0.17 சதவீதம் உயர்ந்து 209.45 ரூபாயாக உள்ளது. இன்று மும்பை பங்குச்சந்தை பெறும் சரிவை எதிர்கொண்டது மூலம் முதலீட்டாளர்கள் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு மதிப்பை இழந்தனர்.


Click it and Unblock the Notifications