வேதாந்தா நிறுவனம் தங்களுடைய ஸ்டீல் தொழிலை அக்டோபர் மாதத்திற்குள் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. வேதாந்தா லிமிடெட் நிறுவனம் தங்களுடைய ஸ்டீல் மற்றும் மூலப்பொருட்கள் தொழிலை நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்குள் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதமே வேதாந்தா தங்களுடைய ஸ்டீல் தொழிலை விற்பனை செய்வது குறித்த ஆய்வுகளை தொடங்கியது. சரியான விலை வரும் வரை காத்திருந்து நாங்கள் விற்பனை செய்வோம் என அனில் அகர்வாலே கூறியிருந்தார். ஆனால், அக்டோபர் மாதத்திற்குள் இந்த விற்பனை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு எலக்ட்ரோ ஸ்டீல்ஸ் என்ற நிறுவனத்தை திவால் தீர்வு நடைமுறைகள் மூலம் வேதாந்தா நிறுவனம் வாங்கியது. தற்போதைக்கு ஸ்டீல் தொழிலை விற்பனை செய்து அதில் கிடைக்கக்கூடிய பணத்தை கொண்டு கடன்களை குறைக்க இருப்பதாக அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
2023-24 ஆம் ஆண்டிற்கான வேதாந்தா குழுமத்தின் ஆண்டு நிதி அறிக்கையில், வேதாந்தார் ரிசோசர்ஸ் நிறுவனத்தின் கடனில் 4 பில்லியன் டாலர்களை குறைப்போம் என இலக்கு நிர்ணயம் செய்திருந்தனர்.
ஆனால் 3.7 பில்லியன் டாலர்கள் கடனை மட்டுமே குறைத்துள்ளனர். எனவே மீதமுள்ள 3 பில்லியன் டாலர்களை குறைக்கவும், மூலதன செலவினத்திற்கு தேவையான பணத்தை உருவாக்கவும் வேதாந்தா இந்த முடிவினை எடுத்துள்ளது.
வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தை பொறுத்தவரை 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 6 பில்லியன் டாலர்கள் கடனை கொண்டுள்ளது. அது மட்டுமின்றி தங்களுடைய கடன் பத்திரங்களை 3.2 பில்லியன் டாலர்கள் என கடந்த ஆண்டு மறுசீரமைப்பு செய்து முதிர்வு காலத்தை நீட்டித்தது.
தங்கள் நிறுவனத்தின் மற்ற திட்டங்களுக்கு தேவையான மூலதனத்தை ஏற்படுத்தவும் ஸ்டீல் தொழிலை விற்பனை செய்வதில் வேதாந்தா கவனம் செலுத்துகிறது.
நடப்பு ஆண்டில் 1.9 பில்லியன் டாலர்களை மூலதன செலவினமாக ஒதுக்கீடு செய்திருப்பதாக வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது. தங்களுடைய அலுமினியம் தொழிலை பொறுத்தவரை அலுமினா ரிஃபைனரி திறனை ஆண்டுக்கு 6 மில்லியன் டன்களாக உயர்த்துவது என இலக்கு நிர்ணயித்துள்ளது.
அலுமினியம் தொழில் மூலம் மட்டும் தங்களுக்கு 4 பில்லியன் டாலர்கள் வருவாயாக கிடைக்கும் என வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குனர் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியில் அலுமினியம் தொழில் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். துத்தநாகம், எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் , இரும்புத் தாது வர்த்தகத்தையும் விரிவுப்படுத்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications