பீகார்: பெட்ரோல், டீசலுக்காக இந்தியா பெருமளவில் வெளிநாடுகளை சார்ந்திருக்கிறது. எனவே அதற்கு மாற்றான எரிபொருட்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் வாகனங்கள் 100% எத்தனாலில் இயங்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பெகுசாராய் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலை பயன்படுத்தி தான் இயங்கும் எனக் கூறினார்.

ஹைட்ரஜன் தான் எதிர்கால எரிபொருள் என்றும் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள வாகனங்கள் பசுமை எரிபொருட்கள் மூலம் இயங்குவதை நாம் காணப்போகிறோம் என தெரிவித்தார்.
எத்தனாலுக்கான தேவை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி பேசிய நிதின் கட்கரி விவசாயிகள் உணவு வழங்குநர்களாக மட்டுமில்லாமல் எத்தனாலை வழங்கக்கூடிய அதாவது எரிசக்தி வழங்குநர்களாகவும் மாறப்போகிறார்கள் என உறுதி கூறினார். வரும் ஆண்டுகளில் இந்தியாவில் எத்தனால் துறை அதிக அளவில் வளர்ச்சி காணும் என்றும் இதில் விவசாயிகளின் பங்கு கணிசமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மோட்டார் சைக்கிள், ஈ- ரிக்ஷா, ஆட்டோ மற்றும் கார்கள் ஆகியவை 100% எத்தனாலில் இயங்கும், அது அடுத்த சில ஆண்டுகளில் சாத்தியப்படும் என்றும் அவர் கூறினார். எத்தனால் எரிபொருளுக்காக விவசாயத் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் நாம் வாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருட்களில் பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக எத்தனால் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
முழுமையாக எத்தனால் எரிபொருளுக்கு வாகனங்கள் மாறினால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் தேவை குறையும் என்றும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் எத்தனால் அடிப்படையில் இயங்கக்கூடிய வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதன் மூலம் காற்று மாசு குறையும் என்றும் எரிபொருட்களுக்காக வெளிநாடுகளை நம்பி இருக்க வேண்டிய தேவை இருக்காது என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து கூறி வருகிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications