பெங்களூரு: பெங்களூரு நகரம் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன ஒரு நகரமாக இருக்கிறது. இங்கே போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்ற வருகின்றன. குறிப்பாக ஐடி மையமான எலக்ட்ரானிக் சிட்டியுடன் நகரத்தை இணைக்கும் மஞ்சள் வழித்தடத்தில் எப்போது ரயில்கள் இயக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மஞ்சள் வழித்தடம்: இந்த சூழலில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கான பணிகளை பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் தீவிரப்படுத்தி இருக்கிறது. மணி கண்ட்ரோல் தளத்தில் இது தொடர்பான செய்தி வெளியாகியிருக்கிறது . இதன்படி பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 7 ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்குவதற்கு திட்டமிட்டு இருக்கிறதாம்.

20 நிமிட இடைவெளி: ஆர்வி ரோடில் தொடங்கி பொம்மசந்திரா வரை முக்கியமான 7 ரயில் நிலையங்களில் மட்டும் ரயில் நின்று செல்லக்கூடிய வகையில் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளனர். தொடக்கத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் என்ற இடைவெளியில் இயக்குவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். மொத்தமாக மஞ்சள் வழித்தடத்தில் 19 கிலோமீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன . இந்த 19 கிலோமீட்டர் நீளம் கொண்ட மஞ்சள் வழித்தடம் ஆர்வி ரோடில் தொடங்கி பொம்மசந்திரா வரை 16 ரயில் நிலையங்களை கொண்டதாக இருக்கிறது.
தொடர்ந்து தாமதம், மக்கள் அவதி: 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால் கொரோனா, ரயில் கட்டுமான உபகரணங்கள் வருவதில் தாமதம் என தொடர்ச்சியாக இந்த பணிகள் தாமதம் அடைந்து வந்தன. இந்த சூழலில் பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு பெங்களூர் மெட்ரோ ரயில் கழகம் முதலில் பகுதியளவு மெட்ரோ சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என முடிவு செய்திருக்கிறது.
ரயில்கள் இல்லாததால் தயக்கம்: தற்போதைக்கு பெங்களூர் மெட்ரோ ரயில் கழக நிர்வாகத்திடம் இந்த பாதையில் இயக்குவதற்கு மூன்று ரயில்கள் மட்டுமே இருக்கின்றன .எனவே அவற்றைக் கொண்டு முதல் கட்டமாக சேவையை தொடங்குவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். முழுமையாக இந்த பாதையில் திட்டமிட்டபடி ரயில்கள் இயக்கப்படுவதற்கு மேலும் சில மாதங்கள் ஆகலாம் என சொல்லப்படுகிறது. இன்னும் ஐந்து ரயில்கள் வந்தவுடன் எட்டு மற்றும் ஒன்பது நிமிட இடைவெளிகளில் அனைத்து நிலையங்கள் வழியாகவும் ரயில்கள் இயக்கப்படும் என பெங்களூர் மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசிடம் ஆலோசனை: தற்போதைக்கு 7 ரயில் நிலையங்களில் மட்டும் கொண்டு 20 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்குவதா அல்லது அனைத்து ரயில் நிலையங்களையும் திறந்து 30 நிமிட இடைவெளியில் இயக்குவதா என்பது குறித்து மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பெங்களூரு மெட்ரோ ரயில் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
பிரதமரை அழைக்க திட்டம்: பெங்களூருவின் ஐடி மையமான எலக்ட்ரானிக்ஸ் சிட்டியுடன் பிரதான நகரபகுதிகளை இணைக்கக்கூடிய ஒரு வழித்தடமாக இந்த மஞ்சள் வழித்தடம் இருக்கிறது. எனவே இந்த பாதையில் மெட்ரோ ரயில் பணிகளை தொடங்கி வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என்பதே பெங்களூரு மெட்ரோ ரயில் கழக நிர்வாகத்தின் விருப்பமாக இருக்கிறதாம். விரைவில் இது தொடர்பான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications