சென்னை: இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக பெட்ரோல் செலவை குறைக்க வேண்டும் என திட்டமிடுவோர் வேகமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். எலக்ட்ரிக் இருச்சக்கர வாகனம் உண்மையில் பட்ஜெட் குடும்பத்திற்கு ஏற்றது.
இந்த நிலையில் இந்திய மக்களின் பல ஆண்டு நம்பிக்கையை பெற்ற ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் 2024--25 ஆம் நிதி ஆண்டுக்குள் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை பொருத்தவரை இந்தியாவில் கணிசமான சந்தை பங்களிப்பினை கொண்டு இருந்தாலும் இந்த நிறுவனம் இதுவரை இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்யவில்லை. தற்போது ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.
இதன் பொருட்டு ஹோண்டா நிறுவனமும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன துறையில் கால் பதிக்க இருப்பதாக ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குனரான யோகேஷ் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இருந்தாலும் இந்த நிறுவனம் எந்த வகையிலான எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யப் போகிறது என்ற அறிவிப்பினை வெளியிடவில்லை. தற்போது இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா இருசக்கர வாகனம் பரவலாக பயன்படுத்தப்படக் கூடிய ஒரு வாகனமாக இருக்கிறது. இதில் எலக்ட்ரிக் வாகனம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதே போல இந்த நிறுவனம் எத்தனால் அடிப்படையிலான எரிபொருளில் இயங்கக்கூடிய வாகனத்தையும் கூடிய விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் கணிக்கப்பட்ட அளவைவிட இருசக்கர வாகன பிரிவு குறிப்பாக எலக்ட்ரிக்கில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனங்களுக்கான சந்தை வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது.
நடப்பாண்டில் மட்டும் இந்த சந்தை 10 முதல் 12 சதவீதம் வரை உயரும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக ஸ்கூட்டர் பிரிவு 24 சதவீதமும் மோட்டார் சைக்கிள் பிரிவு 13 சதவீதமும் வளர்ச்சி அடையும் என கணிக்கப்படுகிறது. எனவே தான் ஹோண்டா நிறுவனம் எலக்ட்ரிக் வாகன பிரிவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.
ஆக்டிவா எலக்ட்ரிக் வாகனமாக விற்பனைக்கு வரும் பட்சத்தில் தற்போது சந்தையில் உள்ள பெரும்பாலான எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு இது கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Story written by: Devika


Click it and Unblock the Notifications