சென்னை: உலகிலேயே அதிக அளவு காலணி உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உருவாகப் போவது தெரியவந்துள்ளது. சான்றிதழ் பெற்ற நிதி திட்டமிடல் நிபுணரான முத்துகிருஷ்ணன் என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், உலகின் 5 முன்னணி காலணி உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் விரைவில் ஆலைகளை நிறுவ இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இதன்படி, தைவானின் hong fu நிறுவனம் தமிழ்நாட்டில் ஹாங்கோ நிறுவனம் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.
அதேபோல தைவானை சேர்ந்த Pou Chen நிறுவனம் 2,302 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. இதன் மூலம் 20,000 வேலை வாய்ப்புகள் உருவாகப் போகின்றன. Freetrend என்ற முன்னணி ஷூ தயாரிப்பு நிறுவனமும் தமிழ்நாட்டில் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்து 15,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது. அடுத்ததாக JR One என்ற நிறுவனம் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் உற்பத்தி ஆலைகளை அமைக்க உள்ளது. சுமார் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்து 50, 000 வேலை வாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது.

இறுதியாக Feng Tay என்ற தைவானை சேர்ந்த மற்றொரு காலணி உற்பத்தி நிறுவனம் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்து 10000 வேலை வாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது. இந்த ஐந்து நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக 1.2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. இந்த ஆலைகள் அனைத்துமே தாங்கள் தயாரிக்கும் காலணிகளை நைக், அடிடாஸ், பியூமா, கிராக்ஸ், ஃபிரடா உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு வழங்குகின்றன.
தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களாக கருதப்படும் பெரம்பலூர் ,அரியலூர், திண்டிவனம் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் தான் இந்த உற்பத்தி ஆலைகள் அமைய உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு அரசு நிலங்களையும் ஒதுக்கீடு செய்திருப்பதால் கூடிய விரைவில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு நமக்கு கிடைக்கப் போகிறது.
ஏற்கனவே இந்தியாவின் மொத்த காலணி உற்பத்தியில் தமிழ்நாடு 32 சதவீத பங்களிப்பை தருகிறது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் இங்கே ஆலையை அமைத்து உற்பத்தியை தொடங்கினால் தமிழ்நாடு உலகிலேயே காலணி உற்பத்தியில் முன்னணி பகுதியாக மாறும். தற்போதைய சூழலில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் காலணிகளில் 50 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் இது மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications