சென்னை: இந்தியாவில் தற்போது யுபிஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் யுபிஐ சேவை வழங்கக்கூடிய தளங்கள் அதில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக ஏடிஎம்களில் பணம் எடுப்பது உள்ளிட்ட புதிய வசதிகள் யுபிஐ செயலிகளிலேயே வருவதால் பாரம்பரியமாக நாம் பயன்படுத்தி வரக்கூடிய டெபிட் கார்டுகளுக்கான தேவை கணிசமான அளவு குறைந்து வருகிறது.படிப்படியாக டெபிட் கார்டுகளின் பயன்பாடு இல்லாத நிலை உருவாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்தியாவில் தற்போது பெரும்பாலானவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு டிஜிட்டல் பேமென்ட் முறையாக இருக்கிறது யுபிஐ. இதன் காரணமாக மக்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவது கணிசமான அளவு குறைந்துவிட்டது. அதாவது ஏடிஎம் மையங்களில் சென்று கார்டினை பயன்படுத்தி பணம் எடுப்பது அல்லது பொருட்களை வாங்கும் இடங்களில் கார்டனை பயன்படுத்தி ஸ்வைப் செய்து பணம் செலுத்துவது என்பன உள்ளிட்ட நடைமுறைகள் குறைந்துவிட்டன.

இந்திய ரிசர்வ் வங்கிய இடம் இருக்கும் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மெர்ச்சன்ட் பேமண்டுகளில் டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்து செய்யப்படும் பேமெண்ட்களின் எண்ணிக்கை 312 மில்லியன் ஆக இருந்து 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 144 மில்லியன் என இது குறைந்துள்ளது.
அடுத்து வரும் நாட்களில் டெபிட் கார்டுகளை வைத்து பொருட்களை வாங்கும் போக்கு இன்னும் குறையும் என சொல்லப்படுகிறது. டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் என்ன பரிமாற்றங்களை எல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் யுபிஐ வாயிலாகவே செய்ய முடியும் என்ற வகையில் தற்போது பல்வேறு வசதிகள் கொண்டுவரப்படுகின்றன.
உதாரணமாக வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்கள் பயன்படுத்துவதற்காக ஏட் ஆன் டெபிட் கார்டுகள் என்ற வசதிகளை கொண்டு இருக்கின்றன. தற்போது யுபிஐ செயலிகளும் இதே போன்ற சேவையை யுபிஐ சர்க்கிள் என்ற பெயரில் வழங்குகின்றன. எனவே இந்த ஏட் ஆன் டெபிட் கார்டுகளுக்கான தேவை இனிமேல் இருக்காது.
அதே போல டெபிட் கார்டுகள் இல்லாமல் யுபிஐ வாயிலாகவே நாம் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் பெற்றுக் கொள்ளும் வசதியும் வர இருக்கிறது. ஏற்கனவே சில வங்கிகளில் கார்டுலெஸ் பணம் எடுக்கும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. எனவே ஏடிஎம்களில் சென்று பணம் எடுப்பதற்கு டெபிட் கார்டுகள் தேவை என்ற சூழலும் மாறி வருவதாக சொல்லப்படுகிறது. இப்படி படிப்படியாக டெபிட் கார்டுகளின் தேவை குறைந்து வருகிறது. எனவே வங்கிகளும் வரும் நாட்களில் டெபிட் கார்டுகள் வழங்குவதை குறைத்துக் கொள்ளும் எனவும் வங்கிகளின் பார்வையில் இதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
டெபிட் கார்டுகளை விநியோகம் செய்து அதனை பராமரிப்பது என்பது வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான செலவை தருகிறது. ஒரு டெபிட் கார்டை தயாரித்து அதனை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஒரு வங்கி சுமார் 200 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
அதேபோல அந்த டெபிட் கார்டுகளை அவர்கள் பயன்படுத்தும் காலம் வரை பராமரிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையினை வாடிக்கையாளர்கள் மெயின்டனன்ஸ் சார்ஜ் என்ற பெயரில் வங்கிக்கு கட்ட வேண்டும். எனவே யுபிஐ மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் சாத்தியமாகும் போது டெபிட் கார்டுகளுக்கு செய்யும் செலவு மக்களுக்கும் வங்கிகளுக்கும் மிச்சமாகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications