தமிழ்நாட்டைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று துவங்கியது. வைப்ரென்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டின் பத்தாவது பதிப்பு ஜனவரி 10 முதல் 12 வரை நடைபெற உள்ளது. ஆரம்பமே அதிரடி என்ற வகையில் டாடா, ரிலையன்ஸ், அதானி, மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்கள் அதிரடியான முதலீட்டைச் செய்துள்ளது.
இக்கூட்டத்தில் டாடா குழுமத்தின் முதலீடு குறித்து டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் பேசுகையில், டாடா குழுமத்திற்கும், குஜராத் மாநிலத்திற்குமான பந்தம் தனித்துவமான முக்கியத்துவமானது. டாடா குழுமம் குஜராத் மாநிலத்தில் 1939 ஆம் ஆண்டு தனது டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தைத் துவங்கியதில் இருந்து ஆரம்பமானது.

பல ஆண்டுகளாக இந்த உறவு வளர்ந்து தற்போது 21 டாடா குழும நிறுவனங்கள் குஜராத்தில் வலுவான இருப்பைப் பெருமையாகக் கொண்டுள்ளன எனத் தெரிவித்தார். இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் மட்டும் டாடா குழும நிறுவனத்தில் சுமார் 50000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
டாடா குழுமத்தின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கு குஜராத் சனந் தொழிற்சாலை மிகவும் முக்கியமான இடமாக இருக்கிறது. இதேபோல் C295 ரக ராணுவ விமானத்தின் உற்பத்தி தற்போது Dholera-வுக்கு விரிவாக்கம் செய்வதாகத் தெரிவித்தார் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன்.
டாடா சன்ஸ் சேர்மன் என் சந்திரசேகரன், செமிகண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலையை Dholera-வில் அமைக்கக் குஜராத் மாநில அரசுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அடுத்த சில மாதங்களுக்குள் குஜராத்தில் 20 ஜிகாவாட் திறன் கொண்ட பேட்டரி ஸ்டோரேஜ் தொழிற்சாலையைக் கட்டும் திட்டத்தைத் துவங்க உள்ளதாகவும் டாடா சன்ஸ் தலைவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக் குஜராத் மாநிலம் முதலீட்டாளர் உச்சி மாநாட்டிற்கு Gateway to the Future என்ற தீம் அடிப்படையில் இக்கூட்டத்தை நடத்த உள்ளது. பிரதமரின் சொந்த மாநிலம் என்பதால் வைப்ரென்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, இன்று முழுக்க இக்கூட்டத்தில் பல்வேறு கூட்டத்தில் கலந்துரையாட உள்ளார்.
குஜராத் குளோபல் உச்சி மாநாடு துவங்குவதற்கு முன்பே இம்மாநில அரசு ஹெச்பிசிஎல், ஐஓசிஎல் மற்றும் பவர் கிரிட் போன்ற முக்கிய நிறுவனங்கள் உட்பட குறைந்தபட்சம் 58 நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.7.17 லட்சம் கோடி அல்லது 86 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுக்கான ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications