நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவருமே ஒரு வருமானத்தை மட்டுமே சார்ந்திருப்பது இல்லை. ஒரு தொழிலில் கிடைக்கும் வருமானத்தை மற்ற தொழில்களில் முதலீடு செய்து தான் இவர்கள் தங்களின் செல்வத்தை பெருக்குகிறார்கள். அந்த வகையில் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி இருக்க கூடிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் இதில் வல்லவர் என்றே கூறலாம்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது தன்னுடைய சொத்து விவரங்கள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் தனக்கு உள்ள அசையும் சொத்துகள் , அசையா சொத்துகளின் மதிப்பு என்ன, எங்கெல்லாம் பணத்தை முதலீடு செய்திருக்கிறேன் என்பதை விரிவாக தெரிவித்துள்ளார்.

விஜய் பொறுத்தவரை கையில் ரொக்கமாக 1,10,000 ரூபாய் வைத்திருப்பதாக கூறி இருக்கிறார். இதை தாண்டி தன்னுடைய சொத்தின் பெரும்பகுதியை அவர் வங்கிகளில் நிலையான வைப்பு தொகை திட்டங்களில் தான் பெரிய அளவில் முதலீடு செய்து இருக்கிறார். அப்படி பார்த்தால் அதிகபட்சமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிலையான வைப்புத் தொகை எனப்படும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் மட்டும் 25 கோடி ரூபாயை டெபாசிட் செய்து வைத்திருக்கிறார்.
அதே போல ஆக்சிஸ் வங்கியில் 40 கோடி ரூபாயை நிலையான வைப்புத் தொகையாக முதலீடு செய்து வைத்திருக்கிறார். ஹெச்டிஎஃப்சி வங்கியில் 20 கோடி ரூபாயும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 15 கோடி ரூபாய் நிலையான வைப்புத் தொகை திட்டங்களில் டெபாசிட் செய்துள்ளார். மொத்தமாக அவர் 100 கோடி ரூபாயை நிலையான வைப்புத்தொகையில் மட்டுமே டெபாசிட் செய்துள்ளார்.
இந்த நிலையான வைப்பு தொகைகளுக்கு சராசரியாக 7.5% வட்டி வருகிறது என வைத்து கொண்டால். இதன் மூலம் மட்டுமே விஜய்க்கு ஆண்டுக்கு 7.5 கோடி ரூபாய் அதாவது ஒரு மாததிற்கு 62.50 லட்சம் ரூபாய் வட்டி வருமானமாகவே கிடைக்கும். அதே போல பல்வேறு வங்கிகளிலும் சேமிப்பு கணக்குகளில் மட்டும் 219.99 கோடி ரூபாயை வைத்திருக்கிறார். அதற்கு 3% சராசரி வட்டி வருமானம் கிடைக்கிறது என்றால் கூட ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும்.
அதாவது விஜய்க்கு சேமிப்பு கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட்கள் மூலமே ஆண்டுக்கு சுமார் 14 கோடி ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். இது ஒரு நாளைக்கு 3.80 லட்சம் ரூபாய். விஜய்க்கு கடன் எதுவும் இல்லை. இவர் தான் பலருக்கு கடன் தந்துள்ளார். எனவே அது தனி வருமானம் உண்டு.கடனில்லாத வாழ்க்கை, நிலையான பாதுகாப்பான வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு என ரிஸ்க் எடுக்காமல் பணத்தை முதலீடு செய்துள்ளார் விஜய். இது போக ரியஸ் எஸ்டேட் முதலீடுகளும் எக்கசக்கமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications

