தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் மிகத் தீவிரமான வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி , தமிழக வெற்றி கழகம் என பல்வேறு கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் எப்படியாவது மக்களின் வாக்குகளை கவர்ந்து விட வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகின்றனர்.
மக்கள் இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு தரப் போகிறார்கள் என்பது மே நான்காம் தேதி வெளியாக கூடிய தேர்தல் முடிவுகள் மூலம் தான் தெரிய வரும். ஆனால் இந்த முறை போட்டி சற்று அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. புதிதாக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் அவருடைய கட்சி களம் காண்கிறது. அதே வேளையில் நாம் தமிழர் கட்சியும் தீவிரமாக தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு இருக்கிறது. அதிமுக இழந்த ஆட்சியை மீட்க வேண்டும் என்பதிலும், திமுக ஆட்சியை தக்கவைத்து விட வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளன.

இந்த தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு 7599 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் சில வேட்பாளர்கள் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்தது மற்றும் சில கட்சிகள் மாற்று வேட்பாளரை கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தது உள்ளிட்டவையும் அடங்கும். 7599 வேட்பு மனுக்களில் 2460 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய தகவலின் படி பார்த்தால் தமிழ்நாட்டிலேயே அதிகமான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமன்ற தொகுதியாக கரூர் தொகுதி இருக்கிறது. கரூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் மொத்தம் 85 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
கரூருக்கு அடுத்ததாக அதிகபட்ச வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டமன்ற தொகுதியாக விஜயின் பெரம்பூர் தொகுதி இருக்கிறது. விஜய் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிருக்கிறார். அவர் இரண்டு தொகுதிகளின் களம் காண்கிறார் ஒன்று பெரம்பூர் மற்றொன்று திருச்சி கிழக்கு. அந்த வகையில் பார்க்கும்போது தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்ட அதாவது அதிக போட்டி கொண்ட இரண்டாவது தொகுதி என்ற பெருமை பெரம்பூருக்கு கிடைத்திருக்கிறது.
பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு எதிராக 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் விஜய் என்ற பெயரிலேயே இரண்டு வேட்பாளர்கள் உள்ளனர். முதலமைச்சர் வேட்பாளர்களிலேயே அதிக போட்டியை எதிர்கொள்ளும் வேட்பாளராக விஜய் இருக்கிறார். திருச்சி கிழக்கு தொகுதியுடன் ஒப்பிடும் போது பெரம்பூரில் தான் விஜய்க்கு போட்டி அதிகமாக உள்ளது. திருச்சி கிழக்கிலும் விஜய் என்ற பெயரில் இரண்டு வேட்பாளர்கள் உள்ளனர்.

அடுத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடக்கூடிய கொளத்தூர் தொகுதியில் 30க்கும் அதிகமானவர்கள் ஸ்டாலினை எதிர்த்து களம் காண்கின்றனர். முதலமைச்சர் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இங்கே எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடக் கூடிய எடப்பாடி தொகுதியில் 14 பேர் மட்டுமே அவரை எதிர்த்து களம் காண்கின்றனர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் களம் காணும் காரைக்குடி தொகுதியில் அவரை எதிர்த்து 24 பேர் களத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications