முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2 மாதங்கள் முடியும் நிலையில் மாநிலத்திற்கான பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடந்ததால் கடந்த திமுக ஆட்சியில் 2026-2027ஆம் நிதியாண்டுக்கு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. புதிய ஆட்சி அமைந்த உடன் முழுநீள பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். அந்த வகையில் விஜய் தலைமையிலான அரசு ஆட்சியில் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த மாத இறுதிக்குள் பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சூழலில் தான் வரும் 16ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
விஜய் அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்னென்ன திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஏனெனில் தவெக சார்பில் தேர்தலின் போது மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கும் திட்டம், பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம், திருமணத்தின் போது தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ஏற்கனவே தாய்மாமன் சீர் திட்டம் அதாவது அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மற்ற திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. ஜூலை 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தவெக அரசின் முதல் முழு நீள பட்ஜெட் தாக்கலுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் பட்ஜெட் தாக்கல் தேதி வெளியாகும்.
இது மட்டுமில்லாமல் மாநிலத்தின் நிதிநிலை, வருவாய் ஆதாரங்கள், புதிய நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள், கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளுக்கான ஒதுக்கீடுகள் குறித்து அமைச்சரவையில் விரிவான ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதித்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக தயாரித்து வருகின்றனர். பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பட்ஜெட் வடிவமைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வாக்குறுதிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே விஜய் அரசு தமிழக நிதி நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

