முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. அண்மையில் நடந்த தேர்தலில் தவெக வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டமன்ற கூட்ட தொடரும் இன்று தொடங்கிவிட்டது.
காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடிய உடன் ஆளுநர் அர்லேகர் வருகை தந்தார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து அதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் ஆளுநர் அர்லேகர் தன்னுடையை உரையை தொடங்கினார். அதில் 1967-இல் அண்ணா, 1977-இல் எம்ஜிஆர், அதற்கு பின் 2026 இல் தமிழக அரசியலில் புதிய வரலாற்று புரட்சி நடந்துள்ளது. 74 ஆண்டுகால வரலாற்று தமிழக அரசியலில் தவெக ஆட்சியின் முதல்வர் ஜோசப் விஜய் தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கியுள்ளார் என கூறினார்.

பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக சாதனை படைத்துள்ளது. விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளவிற்கான வெற்றியை பதிவு செய்துள்ளார் முதல்வர் விஜய் என புகழாரம் சூட்டினார். மாநில உரிமை, பெண்கள் பாதுகாப்பு, நலன், சமூகநீதி, சமவாய்ப்பு ஆகியவை தவெக அரசின் அடிப்படை கொள்கைகள். இதனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும். போதைப் பொருளைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு படை அமைக்கப்படும் என்றார்.
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும் சிங்கப்பெண் அதிரடிப்படை உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது என்றார். தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். கோவை, மதுரை மற்றும் ஓசூரில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி அளிப்பார்கள் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசு இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும், பின்பற்றும். இந்த அரசு தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்பதை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தவெக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றார்.
முந்தைய அரசின் தொழில் கொள்கைகளை தொடர்வதுடன், புதிய தொழில் கொள்கையை தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட உள்ளது. இது தவிர தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும் என கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமையை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என கூறிய உலகத் தரத்திலான பயிற்சிகளை அளிக்க ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும் என்றார்.
கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். மேகதாது விவகாரத்தில் அரசின் சட்ட நடவடிக்கை தொடரும். மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை விரைந்து விடுவிக்க வேண்டும் என்றார். சட்ட விரோத கனிமவள கொள்ளையைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறினார். சென்னையில் சுப்ரீம்கோர்ட்டு கிளை அமைக்க வலியுறுத்தப்படும், அரசின் நிர்வாக செயல்திறனை அதிகரிக்க AI பயன்படுத்தப்படும். கீழடி, ஆதிச்சநல்லூருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வெற்றி தமிழகம் தொலைநோக்கு திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். இது 10 தூண்களை உள்ளடக்கிய வளர்ச்சி பாதையாக இருக்கும் என கூறினார். அதாவது
- தமிழ் அடையாளம் மற்றும் பெருமை
- கண்ணியமான வாழ்வு மற்றும் சமூக பாதுகாப்பு
- மகளிர் நலன்
- இளைஞர் நலன்
- விவசாயிகள் ,விவசாயக் கூலி தொழிலாளர்கள் மற்றும் மீனவர் நலன்
- உலகத்தரம் வாய்ந்த கல்வி
- வளமான தமிழ்நாடு
- சிறந்த மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல்
- உலகத்தரமான கட்டமைப்பு
- மக்கள் நல அரசு - நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம்
ஆகிய 10 அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தந்து அதன் அடிப்படையிலான வளர்ச்சி பாதையாக அது இருக்கும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications


