2016 ஆம் ஆண்டில் இந்திய தொழில்துறையே அதிரக்கூடிய வகையில் வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான பணத்தை கடனாக வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார் தொழிலதிபர் விஜய் மல்லையா. இந்தியாவிலிருந்து தப்பிய அவர் பிரிட்டனுக்கு சென்று தஞ்சம் அடைந்தார். இதனை அடுத்து அவரை பொருளாதார குற்றவாளி என மத்திய அரசு அறிவித்தது. அதுமட்டுமின்றி இந்தியாவில் இருந்த அவருடைய சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
இவ்வாறு இந்தியாவில் வங்கி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியோடியவர்களிடம் இருந்து எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்து செவ்வாயன்று மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

விஜய் மல்லையாவின் 14131.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த நிலையில் நிதி அமைச்சரின் இந்த விளக்கம் தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய் மல்லையா பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.
"கிங்பிஷர் ஏர்லைன்ஸின் மொத்த கடன் வட்டி தொகை 1,200 கோடி ரூபாயுடன் சேர்த்து 6203 கோடி ரூபாய் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அமலாக்க துறையால் எனது சொத்துக்கள் 14 ,131.6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். நான் செலுத்த வேண்டிய கடனை விட இரண்டு மடங்கு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் என்னை இன்னும் பொருளாதார குற்றவாளியாகவே வைத்திருக்கிறார்கள் " என கூறியுள்ளார்.
"என்னுடைய கடன் தொகையை விட இரு மடங்குக்கு மேல் வசூல் செய்யப்பட்டதை அமலாக்கத் துறையும் வங்கிகளும் நியாயப்படுத்தவில்லை என்றால் அதற்கு நிவாரணம் கோரும் உரிமை எனக்கு இருக்கிறது" என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார் .

"கடன் தொகையை தாண்டி என்னிடமிருந்து 8000 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. யாராவது இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவார்களா ? இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவாக குரல் கொடுக்க தைரியம் தேவை, ஆனால் யாரிடமும் அந்த தைரியம் இல்லை" என காட்டமாக கூறியுள்ளார்.
சிபிஐ பதிவு செய்துள்ள குற்ற வழக்குகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். சிபிஐ என்ன வழக்கு பதிவு செய்தது?, நான் யாரிடமிருந்தும் ஒரு ரூபாய் கூட கடனாக பெறவில்லை, திருடவில்லை என விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். ஒன்பது ஆண்டுகள் கடந்தும் நான் மோசடி செய்ததற்கும் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதற்கும் உறுதியான ஆதாரத்தை தாக்கல் செய்யாதது ஏன் என்றும் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications