அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை பெற்ற தவெக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதனை அடுத்து தமிழக முதலமைச்சராக விஜய் கடந்த 9ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
முதலமைச்சர் மற்றும் 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16ஆம் தேதி இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக அமைச்சரை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் இணைந்துள்ளனர். தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத், அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ் உள்ளிட்ட 23 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் தவெக ஆதரவு கட்சி தலைவர்களான திருமாவளவன், பெ.சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அமைச்சரவை இதுவரை திராவிட கட்சிகளால் செய்ய முடியாத பலவற்றையும் செய்து காட்டியுள்ளது.
74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக 4 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராக, 1967ஆம் ஆண்டு சத்யவாணி முத்து நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டது. 2011-2016-ம் ஆண்டு கால அதிமுக ஆட்சியில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 3 பெண்கள் அமைச்சராக இருந்தனர். தற்போது, தவெக அமைச்சரவையில் 4 பெண்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில், இன்று எஸ்.கமலி (அவினாசி தொகுதி), சி.விஜயலட்சுமி (குமாரப்பாளையம்), கே.ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்) ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இது மட்டுமல்ல தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்கள் 7 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 7 பட்டியலின எம்எல்ஏக்களுக்கு அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எழும்பூர் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜ்மோகன் கடந்த பத்தாம் தேதி அமைச்சராக பதவி ஏற்றார் அவருக்கு பள்ளிக் கல்வித் துறையை ஒதுக்கியது.
அவரை அடுத்து இன்றைய தினம் ராசிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் பேரவை தலைவரும் அதிமுக மூத்த தலைவருமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அவிநாசி எம்எல்ஏ கமலி, ஒட்டப்பிடாரம் தனி தொகுதி எம்எல்ஏ மதன் ராஜா , ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ தென்னரசு, அரக்கோணம் தொகுதி எம்எல்ஏ காந்தி ராஜ் மற்றும் காங்கிரஸ் மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications

