தமிழ் திரையுலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி.. அதை அழகாக நடித்து ரசிகர்களை கவரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது அவர் எட்டியிருக்கும் புகழ், பெருமை ஆகியவற்றுக்கெல்லாம் பின்னால் பல போராட்டங்களை சந்தித்து தான் இதை செய்திருக்கிறார். விஜய் சேதுபதி, தான் சிறுவயதில் சந்தித்த பிரச்சனைகளையும், அதிலிருந்து அவர் கற்றுக்கொண்ட பாடத்தையும் Truly Ram என்ற யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் விஜய் சேதுபதி, தனது குழந்தை பருவம் எவ்வளவு சிரமமானதாக இருந்தது என்பதை பகிர்ந்து கொண்டார். அவர் சிறு வயதில் இருக்கும்போது அவருடைய வீட்டிற்கு கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணம் கேட்க வருவார்களாம். அந்த சங்கடமான சூழ்நிலையெல்லாம் பார்த்து பயப்படாமல் தன் தந்தையின் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு என்ன நடக்கிறது என்பதை பார்த்திருக்கிறார்.

சிறு வயதிலிருந்தே பிரச்சினைகளை பார்த்து பயப்படாமல் அதை எதிர்கொள்ளும் அனுபவம் இதன் மூலமாகத்தான் அவருக்கு கிடைத்துள்ளது. குழந்தையாக இருக்கும்போது அவருக்கும் திரை துறையில் பெரிதாக நாட்டமில்லை. குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க வேண்டும், வறுமையை போக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே இலக்காக இருந்துள்ளது.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு தன் குடும்ப கஷ்டத்தை போக்குவதற்காக பல வேலைகளை செய்திருக்கிறார். பள்ளியில் படித்துக் கொண்டே தினக்கூலி வேலை செய்வது, டெலிபோன் பூத் நடத்துவது, எந்த ஒரு சிறு வேலையாக இருந்தாலும் அதை தட்டாமல் செய்வது என தன் குடும்ப சூழ்நிலையால் சிரமமான வேலைகளை எல்லாம் செய்திருக்கிறார்.
அதன் பின் விஜய் சேதுபதி துபாய்க்கு சென்று பணிபுரிந்தார். அங்கு அக்கவுண்டண்டாக பணியாற்றி விட்டு இந்தியா திரும்பினார். பின்னர் தமிழ் திரைதுறையில் மெல்ல மெல்ல காலடி எடுத்து வைத்தார்.
தமிழ் திரையுலகில் அவர் செய்த சாதனை அவருக்கு உடனடியாக கிடைக்கவில்லை. பல ஆண்டுகள் சின்ன சின்ன பாத்திரங்களை ஏற்று நடித்தார். பின்னர் தன்னுடைய கடின உழைப்பின் காரணமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். சூது கவ்வும், விக்ரம் வேதா, மகாராஜா, தென்மேற்கு பருவக்காற்று போன்ற முக்கியமான திரைப்படங்களின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தார். பல பிரச்சினைகளைக் கடந்து இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராக மாறி இருக்கிறார்.
விஜய் சேதுபதியை போல் சாதனை படைத்த பலரும் கடுமையான பொருளாதாரப் போராட்டங்களுக்கு பின்னரே ஜெயித்துக் காட்டியுள்ளனர். எனவே அவ்வப்போது ஏற்படும் பணப்பற்றாக்குறை அல்லது கடினமான சூழ்நிலை ஒருவரின் வெற்றியை தீர்மானிக்காது. எப்பேற்பட்ட பிரச்சினை வந்தாலும் அதை கண்டு பயப்படாமல் தைரியமாக எதிர்கொள்ளும் போது எந்த தடை வந்தாலும் அதை கடந்து வெற்றியடைய முடியும் என்பதற்கு விஜய் சேதுபதி ஒரு சிறந்த உதாரணம்.


Click it and Unblock the Notifications
