தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் எதிர்பாராத பல திருப்பங்களை தந்தது. தவெக தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் ஆட்சி செய்து வருகிறார். ஆளுங்கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியானது. குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலினே தோல்வி அடைந்தார். இந்நிலையில் தேர்தலில் அரசியல் கட்சிகள் எவ்வளவு பணம் செலவிட்டன என்ற சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தவெக மற்றும் திமுக செய்த செலவுகளின் ஒப்பீடு நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் தேர்தல் செலவினை பிரமாண பத்திரமாக தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தேர்தல் செலவினை தாக்கல் செய்துள்ளன. இதன்படி ஆளுங்கட்சியான தவெக இந்த தேர்தலில் 19.81 கோடி ரூபாயை செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

விஜய்யின் விமானப் பயணத்திற்காக மார்ச் 14 முதல் ஏப்ரல் 28 வரையிலான காலகட்டத்தில் TAI Jets Pvt Ltd, Chipsan Aviation Pvt Ltd மற்றும் Fly High Global Aircraft Management Services Pvt Ltd ஆகிய நிறுவனங்களுக்கு நான்கு முறை பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஆன்லைன் பிரச்சாரங்களுக்கு கட்சி தரப்பில் எந்த பணமும் செலவிடப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக, பொது பிரச்சார செலவில் 6.35 கோடி ரூபாய், செய்தித்தாள்கள், எலக்ட்ரானிக் மீடியா மற்றும் ரேடியோ உள்ளிட்ட ஊடக விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. இதில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 1.79 கோடி ரூபாயும் அடங்கும்.
பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு 2.06 கோடி ரூபாய், புத்தகங்கள் என குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சார பொருட்களுக்காக 40.55 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது தவெகவின் கையிருப்பு 3.03 கோடியாக இருந்தது. தேர்தல் காலத்தில் கட்சிக்கு கிடைத்த மொத்த வரவுகள் 7.02 கோடி ரூபாயாகும்.
எதிர்க்கட்சியான திமுக தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தேர்தலுக்கு மொத்தமாக திமுக 197.84 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. குறிப்பாக விளம்பரங்களுக்கு மட்டும் 70 கோடியை செலவு செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் 149.89 கோடி ரூபாயை திமுக செலவிட்டுள்ளது.
திமுக செலவிட்ட தொகையான 197.84 கோடி ரூபாயுடன் ஒப்பிட்டால் தவெக பத்தில் ஒரு பங்காக 19.8 கோடி ரூபாயை தான் செலவு செய்துள்ளது. அதாவது தேர்தலில் அதிக பணத்தை செலவிட்டிருந்தாலும் திமுக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, ஆனால் அதில் சொற்ப பணத்தை மட்டுமே செலவிட்டு தவெக ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான அக்கட்சியின் மொத்த தேர்தல் செலவு தொகையாக 112.39 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட மொத்த செலவு 1.37 கோடி ரூபாயாகும். பிரசாரம் மற்றும் விளம்பரங்களுக்காக 93 லட்சமும், வேட்பாளர்களுக்கான செலவுக்காக 44 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications


