பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த முறை மக்கள் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தவெகவுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 74 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்திலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

இதன் மூலம் அதிக இடங்களை பெற்ற தனி கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எதிர்கட்சி அந்தஸ்து திமுகவுக்கு கிடைத்துள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை. ஆனால் தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இருந்தாலும் தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-தான் ஆட்சி அமைக்கும் உரிமையை முதலில் பெறும்.
இந்த சூழலில் தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரி தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என அவர் கூறியிருக்கிறார். தற்போது தவெக பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக 12 இடங்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் ,தேமுதிக ,பாமக உள்ளிட்ட கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு ஆதரவு தரக்கூடிய பட்சத்தில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது மலரும். இதற்கிடையே திமுக இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூரிலேயே தோல்வி அடைந்திருக்கிறார். இந்த சூழலில் அரசமைப்பு நடைமுறைகளின் படி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஸ்டாலின் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

இதனை அடுத்து தவெக தலைவர் விஜயை சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார். அப்போது 118 தொகுதிகள் கொண்டு பெரும்பான்மை நிரூபிக்கும் பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமையும் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பார். இதற்காக ஆளுநர் நாளைய தினம் சென்னைக்கு வருகை தருவார் என சொல்லப்படுகிறது.
ஆளுநர் தவெக தலைவர் விஜய்க்கு 2 வாய்ப்புகளை வழங்குவார் என சொலப்படுகிறது. ஒன்று விஜய் சட்டசபையில் தனக்கு 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதை நிரூபித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் அல்லது தனக்கு ஆதரவு தரும் கட்சிகளிடமிருந்து கடிதங்களை பெற்று தன்னிடம் 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதை உறுதி செய்யலாம். இதனை அடுத்து ஆளுநர் விஜய்க்கு ஆட்சி அமைக்கும் உரிமையை வழங்குவார்.
தற்போதைக்கு எந்த கட்சிகள் விஜய்க்கு ஆதரவு வழங்கும் எப்படி கூட்டணி ஆட்சி அமைய போகிறது என்பது தான் கேள்வியாக இருக்கிறது. இதற்காகவே தவெக தரப்பில் 2 வாரம் அவகாசம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கூட்டணி ஆட்சி என்பது எப்போதுமே தலைவலி என்பதால் விஜய் தரப்பு அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என நினைப்பதாக தெரிகிறது. எப்படி இருந்தாலும் 2 வாரங்களில் முதலமைச்சராக விஜய் பதவியேற்பது உறுதி.


Click it and Unblock the Notifications

