தமிழக அரசியலில் இதுவரையில் யாரும் செய்திடாத சாதனையைப் பிரபல நடிகர் மற்றும் அரசியல் தலைவரான ஜோசப் விஜய் செய்து காட்டியுள்ளார். 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டாலும் சுமார் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இன்று தமிழக முதல்வராகவும் மாறியிருக்கிறார். பல ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக இந்திய அரசியலில் முதன்மை வகித்து வந்த நிலையில் அதையெல்லாம் தகர்த்தெறிந்து தன்னுடைய புதிய கட்சியின் மூலமாக ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறார்.
வெற்றி பெற்று முதலமைச்சராக அரியணையில் அமர்வது ஒரு புறம் இருந்தாலும், இதற்கு பிறகு தான் முதல்வர் விஜய்க்கு பெரிய பொறுப்பே இருக்கிறது. நிதி நிர்வாகம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. பல சவால்கள் மற்றும் பல போராட்டங்களை சந்திக்க வேண்டும். அதையெல்லாம் எப்படி விஜய் முறியடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது தமிழக மக்களுக்கு மேலோங்கத் தொடங்கியுள்ளது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவை தக்க வைப்பாரா விஜய்?: இதற்கு முன்னர் தமிழக அரசியலில் போட்டியிட்டு முதல்வராக அமர்ந்தவர்கள் மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் பிற கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கிறார். விஜய்க்கு விசிக, காங்கிரஸ், IUML போன்ற சில கட்சிகள் ஆதரவை வழங்கியுள்ளன. இந்த கட்சிகள் விஜய்யுடன் கூட்டணி சேர்வதற்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்களை வழிநடத்தி பதவிக்காலம் முழுவதும் கொண்டு செல்வது என்பது விஜய்க்கு முன்னால் இருக்கும் முதல் சவால்.

சினிமா டூ முதல்வர்: தமிழ்நாட்டில் திரைப்பட நட்சத்திரங்கள் அரசியலில் நுழைவது என்பது வழக்கமான ஒன்றுதான். எம்ஜிஆர் தொடங்கி இன்று விஜய் வரையில் அரசியலுக்கு வருவதற்கு முன்பு திரைப்படங்களில் தோன்றியவர்கள் தான் அதிகம். எது எப்படியோ முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் விஜய்க்கு தற்போது பல புதிய பொறுப்புகள் காத்திருக்கின்றன. ஏற்கனவே இவருக்கு நிர்வாக அனுபவம் இல்லாத நிலையில், இதன் பிறகு பொருளாதார நெருக்கடிகள் மற்றும் இக்கட்டான சூழ்நிலைகளை எப்படி கையாளப் போகிறார் மற்ற துறைகளில் உள்ள அதிகாரிகளை எப்படி வழி நடத்தப் போகிறார் என்பது அடுத்த சேலஞ்ச்.
தேர்தல் களத்தில் பிற கட்சிகளுடன் மோதிக் கொண்டாலும் நேற்று அவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி பிற அரசியல் தலைவர்களையும் சந்தித்து மரியாதை செலுத்தியதை பார்த்தோம். நிதானமான ஒரு நிர்வாகி எப்படி இருப்பாரோ? அதற்கான அறிகுறிகள் விஜய்யிடம் தென்படுகிறது.
தமிழகத்தின் நிதிநிலை: தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு ஒவ்வொரு கட்சியினரும் நிறைய சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அப்படி தமிழக வெற்றிக் கழகமும் மக்களுக்கு உதவும் வகையில் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தது. விஜய்யின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு அவர் விரைவில் அதை செய்வாரா? என்பது அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கு முன்னர் தமிழகத்தின் நிதிநிலையையும் நாம் உற்று நோக்க வேண்டும்.
தனது பதவியேற்பு விழாவின் போது விஜய், தமிழகத்தின் கடன் தற்போது ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டி இருப்பதாகத் தெரிவித்தார். தற்போதைய சூழல் இப்படி இருக்கையில் மக்களுக்கு விஜய் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற போகிறார் என்பது அடுத்ததாக எழும் கேள்வி. தன்னுடைய நிர்வாகத்தை பற்றி மக்கள் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடவும் விஜய் தயாராகி வருகிறார்.
மக்களின் எதிர்பார்ப்பு: ஒரு சில கட்சிகள் இன்னமும் முதல்வர் நாற்காலியில் அமர முடியாமல் தவித்து வரும் சூழலில், முதல் முறை தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்துள்ள விஜய் மீது மக்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உள்ளது. வேலைவாய்ப்பில் தொடங்கி விலைவாசி கட்டுப்பாடு வரை உடனடி மாற்றம் வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஒருவேளை விஜய் சொன்ன வாக்குறுதிகளில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டாலும், புதிய நிர்வாகத்திற்கு அது பிரச்சினையாக மாறக்கூடும் என்பதே நிதர்சன உண்மை.
எதிர்க்கட்சியை எப்படி சமாளிக்கப் போகிறது தமிழக வெற்றிக் கழகம்?: அரசியல் நாகரீகத்தோடு மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விஜய் சந்தித்தாலும், திமுக மற்றும் TVK இடையிலான போட்டி இன்னும் தீவிரமாகவே உள்ளது. திமுக ஆட்சியை இழந்திருந்தாலும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் எதிர்க்கட்சியின் அரசியலை டிவிகே எப்படி சமாளிக்க போகிறது? சட்டப்பேரவையில் எழும் கேள்விகளுக்கு விஜய் எப்படி பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடின உழைப்பின் மூலம் முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்ந்து விட்டார். ஆனால் அவருடைய நிர்வாகத்திற்கு மக்கள் ஆதரவு தருவார்களா? இல்லையா? என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications