ரூ. 1 கோடி சம்பளத்தில் தனக்கு கிடைத்த ஆஃபரை உதறி தள்ளிவிட்டு இன்று ரூ. 4,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை ஒரு பெண் நிறுவியுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தில் இன்னொரு புரட்சி பெண்மணியை பற்றி தான் பார்க்கவுள்ளோம். வெறும் 23 வயதில் இத்தகைய சாதனையை படைத்துள்ளார். அவர் யார்?, அப்படி என்ன செய்தார்? என்பது குறித்து பார்ப்போம்.
23 வயதான வினீதா சிங் தான் தற்போது பலராலும் பயன்படுத்தப்படும் சுகர் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. இவருக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் இந்நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு வேலை கிடைத்துள்ளது. ஆனால் அதை விட்டுவிட்டு தன் கனவை நோக்கி செல்ல திட்டமிட்டுள்ளார்.

10 வயதில் இருக்கும் போது வினிதாவும் அவருடைய நண்பரும் ஒரு சிறு பத்திரிக்கையை தொடங்கி.. அதை வீட்டுக்கு வீடு சென்று ரூ.3-க்கு விற்பனை செய்துள்ளனர். பலர் அதை வாங்க மறுத்தாலும்.. இந்த அனுபவம் விலை நிர்ணயம், விற்பனை போன்ற மதிப்புமிக்க பாடங்களை வினிதாவுக்கு கற்றுக் கொடுத்தது.
சிறுவயதிலிருந்தே தொழில் முனைவோர் ஆர்வம் இருந்ததால் பல்கலைக்கழகத்தில் நுழைந்த போது வழக்கமாக கல்லூரியில் சேரும் மாணவர்கள் யோசிப்பதற்கு வெளியில் தன்னை பற்றி யோசிக்க தொடங்கியுள்ளார். ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐஎம் அகமதாபாத்தில் இருந்து பட்டம் பெற்ற பின், ஒரு நல்ல நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய அளவு தகுதியை கொண்டிருந்தார்.
23 வயதில் ஒரு பெரு நிறுவனத்தில் இருந்து ரூ.1 கோடி சம்பளத்தில் வேலை வாய்ப்பும் கிடைத்தது. இவ்வளவு இளம் வயதில் இது ஒரு பெரிய சாதனை தான். இருந்தாலும் அதை மறுத்து தனது சொந்த பாதையை செதுக்க தேர்ந்தெடுத்தார். அவரது குறிக்கோள் என்னவோ பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தான் செயல்பட வேண்டும் என்பதுதான்.
சுகர் காஸ்மெட்டிக்ஸ் திறப்பு: 2015-ஆம் ஆண்டில் இந்தியாவின் அழகு துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்குடன் வினிதா சுகர் காஸ்மெட்டிக்சை நிறுவினார். இந்திய பெண்களுக்கு ஏற்றவாறு உயர்தர மலிவு விலையிலான தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் ஒரு சிக்கல் இருப்பதை கண்டறிந்தார்.
உலகளாவிய அழகு சாதன பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருந்தாலும் இந்தியாவின் மாறுபட்ட தோல் நிறம் மற்றும் இங்குள்ள மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப சில பொருட்களை தயார் செய்ய முடிவெடுத்தார். இந்திய நுகர்வோருக்காக பிரத்தியேகமாக அழகு சாதன பொருட்களை எல்லாம் தயார் செய்தார்.
சுகர் பிராண்டின் லிப்ஸ்டிக்குகள், ஐலைனர்கள் மற்றும் பல அழகு சாதன பொருட்கள் இந்தியாவில் மட்டுமல்ல இந்திய புலம்பெயர்ந்தோர் மத்தியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் சுகர் விரைவில் பிரபலம் அடைந்தது.
சுகர் பிராண்டின் விரைவான வெற்றிக்கு முக்கிய காரணம் டிஜிட்டல் வணிகம் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங். வினிதா பிரபலங்கள் மூலம் சுகர் பிராண்டை மார்க்கெட்டிங் செய்ய தொடங்கினார். உலகளாவிய பிராண்டுகளை போல் அல்லாமல் சுகர் ப்ராண்ட் குறிப்பாக இந்திய தோல் நிறங்களுக்கு ஏற்ற தயாரிப்புகளை அதிக அளவில் உருவாக்கியது. பிப்ரவரி 2025 நிலவரப்படி, சுகர் காஸ்மெடிக்ஸின் மதிப்பு ரூ.30 பில்லியன் ஆகும். இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட கடைகளோடு ஆன்லைன் வணிகத்திலும் ஈடுபட்டு தனது உலகளாவிய வரம்பை விரிவுபடுத்தி வருகிறது சுகர் பிராண்ட்.


Click it and Unblock the Notifications