நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்பதற்காகத் தனி எலக்ட்ரிக் வாகன கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் டெஸ்லா நிறுவனம் கடைசி நேரத்தில் ஜகா வாங்கியது மட்டும் அல்லாமல் இந்தியாவில் தொழிற்சாலை கட்டும் பணிகளைத் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றமாகப் பார்க்கப்படும் வேளையில், தமிழ்நாடு அரசு ஆரம்பத்தில் இருந்து டெஸ்லா-வை நம் மாநிலத்திற்கு ஈர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாலும். டெஸ்லா-வை மட்டுமே நம்பியிருக்காமல் வின்ஃபாஸ்ட் -ஐ தட்டி தூக்கியது.

தமிழ்நாட்டின் துறைமுக நகரமான தூத்துக்குடியில் எலக்ட்ரிக் கார் (Electric Vehicle - EV) ஆலைக்கான களப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வியட்நாமிய நிறுவனமான வின்ஃபாஸ்ட் இந்த ஆலையை நிறுவும் பணிகள் மந்தமாகத் துவங்கினாலும், தற்போது வேகமெடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசுடன் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து, வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போது ஆலைக்கான இடத்தை தயார்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த ஆலை சுமார் 380 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது, ஆண்டுக்கு 1,50,000 எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 3,000 முதல் 3,500 வரையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை மேம்படுத்துவதற்கு இது ஒரு பெரிய பங்களிப்பாக இருக்கும்.
தமிழ்நாடு எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான ஹப் ஆக மாறுவதற்கான முயற்சிகளில் இது ஒரு முக்கிய படியாகும். மாநில அரசு ஏற்கனவே எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலையின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், அடுத்த சில ஆண்டுகளில் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலை இயங்கத் தொடங்கும் போது, தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஒரு புதிய மைல்கல்லைத் தொட உள்ளது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்தியாவில் VF3 க்கான காப்புரிமைக்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளது. 2024 லாஸ் வேகாஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட வின்ஃபாஸ்ட் VF3 எலக்ட்ரிக் எஸ்யூவி, குறுகலான ஆனால் வலுவான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் நீளம் 3,190 மிமீ, அகலம் 1,679 மிமீ, உயரம் 1,620 மிமீ ஆகும்.
வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட் தூத்துக்குடியில் 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் இந்தத் தொழிற்சாலை முழுவதும் ஏற்றுமதி சார்ந்து இருக்கும்.


Click it and Unblock the Notifications